Last Updated : 26 Oct, 2021 04:21 PM

 

Published : 26 Oct 2021 04:21 PM
Last Updated : 26 Oct 2021 04:21 PM

உ.பி.யில் கார் மோதிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்திக்கு திருச்சியில் அஞ்சலி

திருச்சியில் விவசாயிகளின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்திய விவசாய சங்கத்தினர்.

திருச்சி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் போராட்டத்தின்போது கொல்லப்பட்ட விவசாயிகள் 4 பேர் உட்பட 5 பேரின் அஸ்திக்கு திருச்சியில் இன்று விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் இந்த மாதத் தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கார் மோதிக் கொல்லப்பட்ட விவசாயிகள் 4 பேர், பத்திரிகையாளர் ஒருவர் என 5 பேரின் அஸ்தியை ஐக்கிய விவசாயிகள் முன்னணி நாடு முழுவதும் கொண்டுசென்று அஞ்சலி செலுத்தி, மத்திய பாஜக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டுக்கும் அஸ்தி வரப் பெற்று அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு, மத்திய அரசுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது. ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.எம்.குணசேகரன், கே.வீ.இளங்கீரன், கி.வே.பொன்னையன் உட்பட 12 பேர் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் அக்.23-ம் தேதி தொடங்கி காஞ்சிபுரம், வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், உளுந்தூர்பேட்டை, ஆத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இன்று அஸ்தி கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் வழியாக வேதாரண்யத்தில் கடலில் இன்று அஸ்தி கரைக்கப்பட உள்ளது.

திருச்சியில் காந்தி மார்க்கெட் அருகேயுள்ள கமான் வளைவு பகுதியில் இன்று நடைபெற்ற அஸ்தி நினைவஞ்சலி நிகழ்ச்சியில், “லக்கிம்பூர் கெரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 4 பேர் காரை மோதிக் கொன்ற சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோதா 2020-ஐத் திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடர்ந்து, அஸ்திக்கு அஞ்சலி செலுத்திய விவசாயிகள், "மத்திய பாஜக அரசை ஆட்சியில் இருந்தும், நாட்டில் இருந்தும் அப்புறப்படுத்த வேண்டும்" என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

திருச்சியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சிவசூரியன், முகம்மதலி, இந்திரஜித், சிதம்பரம், பாண்டியன், செழியன், ரவிக்குமார், சம்சுதீன், ஜோசப், ஜெயசீலன், திராவிடமணி, ரங்கராஜன், சிவா, காங்கிரஸ் சரவணன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x