

தென் மாவட்டங்களுக்கு ஒரு வாரம் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, அதிமுக கொடி கட்டிய காரில் இன்று காலை சென்னையில் இருந்து கிளம்பினார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, மீண்டும் கட்சியில் இணைவதில் ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே எதிர்பாராதவிதமாக, ''அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் முடிவு. அதிமுக தொண்டர்களின் இயக்கம். சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்'' என்று ஓபிஎஸ் நேற்று தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடி தரும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''சசிகலாவையும் அவரைச் சார்ந்தவர்களையும் எதிர்த்துத்தான் தர்மயுத்தத்தை ஓபிஎஸ் நடத்தினார். சசிகலா, அவரைச் சார்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். அப்படி வைத்துக்கொண்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கெனவே தீர்மானம் போடப்பட்டுள்ளது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என அனைவரும் கையெழுத்திட்டுள்ளோம்'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தென் மாவட்டங்களுக்கு 1 வாரம் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, அதிமுக கொடி கட்டிய காரில் இன்று காலை சென்னையில் இருந்து கிளம்பினார். தி.நகர் வீட்டில் இருந்து கிளம்பிய சசிகலாவுக்கு, ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர். அவருடன் இளவரசியும் உடன் செல்கிறார்.
மக்கள் ஆதரவைத் திரட்ட சசிகலா, 25 இடங்களில் தொண்டர்களைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முதலில் தஞ்சாவூர் செல்லும் சசிகலா, இன்று இரவு அங்கேயே தங்கிய பின்னர், நாளை (அக்.27) டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கிறார். அதற்கு அடுத்த நாள் (28-ம் தேதி) மதுரை செல்லும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார். அங்கே தனது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
அக்டோபர் 29-ம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களைச் சந்திக்கிறார். 30-ம் தேதி மதுரை முத்து ராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்கும் சசிகலா அன்றைய தினமே தஞ்சை திரும்புகிறார். நவம்பர் 1ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சசிகலா, மீண்டும் ஆதரவாளர்களைச் சந்திக்கிறார். மேலும் திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கும் அவர் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பயணத்துக்கான முன்னேற்பாடுகளை அமமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைத்துக் கொள்வது குறித்து ஓபிஎஸ் மற்றும் கட்சியினரிடையே உள்ள மாறுபட்ட கருத்துகள் ஊடகங்களில் வெளியான சூழலில் சசிகலாவின் ஒரு வார கால சுற்றுப்பயணம் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.