உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் படுகொலை: ஸ்டாலின் கண்டனம்

உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் படுகொலை: ஸ்டாலின் கண்டனம்
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம், உடுமலை, குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் சங்கர் உடுமலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் எழுதி வெளியிட்ட பதிவில், ''தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு மோசமாகி விட்டது என்பதன் உச்சகட்ட கொடூரம்தான், மார்ச் 13ந் தேதியன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடுரோட்டில் நடந்த கொலை சம்பவமாகும்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் சங்கர் உடுமலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவுசல்யா தங்கள் உயிருக்கு ஆபத்து என்று பல கட்டங்களில் புகார் அளித்தும் காவல்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்று வெளிவந்துள்ள செய்தி கவலையளிக்கிறது.

அனைத்து தரப்பு மக்களிடமும் நல்லிணக்கம் நிலவ திமுக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. சமூக நல்லிணக்கத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் கழக ஆட்சியில்தான் தொடங்கி வைக்கப்பட்டன.

அவற்றையெல்லாம் முடக்கிய ஜெயலலிதா அரசு, கடந்த 5 ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கை மாநிலத்தில் சந்தி சிரிக்க வைத்து விட்டது. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்றவை அதிகரித்து கொண்டேயிருக்கின்றன. காவல்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதல்வர் ஜெயலலிதா இது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், டாஸ்மாக் கடைகளுக்கும் தன்னுடைய படம் போட்ட பேனர்களுக்கும் போலீஸாரை பாதுகாப்பாக நிறுத்தியிருக்கிறாரே தவிர, மாநிலத்தில் அமைதியான சூழல் ஏற்படுவதற்கு காவல்துறையைப் பயன்படுத்தவில்லை.

குறிப்பாக தென்னிந்திய மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மண்டலத்தில் வன்முறை கலாச்சாரமும், துப்பாக்கி கலாச்சாரமும் சமீப காலமாக தலை தூக்கியிருப்பதற்கு செயலற்ற அதிமுக ஆட்சியே காரணம்.

தமிழகத்தில் காவல்துறை செயல்படுகிறதா, அந்த காவல்துறையை வழிநடத்தும் ஒரு ஆட்சி தமிழகத்தில் இருக்கிறதா என்ற கேள்வி எழுவது மட்டுமின்றி, பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறோம் என்ற பயத்தையும், பீதியையும் மக்கள் மத்தியில் இந்த ஐந்தாண்டு அதிமுக ஆட்சி ஏற்படுத்தியிருப்பது வேதனைக்குரியது.

தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், அனைத்து தரப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இனியாவது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in