Published : 10 Jun 2014 09:58 AM
Last Updated : 10 Jun 2014 09:58 AM

தமிழக உரத் தொழிற்சாலைகளுக்கு தொடர்ந்து மானியம் வழங்க வேண்டும்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தில் உள்ள 2 உரத் தொழிற்சாலைகளும் எரிவாயு இணைப்புக்கு மாறும்வரை தொடர்ந்து அவற்றுக்கு மானியம் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உரத்துறை, கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஒரு புதிய விலைக் கொள்கையை வெளியிட்டது. அதில், ‘நாப்தா மூலம் யூரியா உரம் உற்பத்தி செய்யும் அனைத்து உரத் தொழிற்சாலைகளும் எரிவாயு இணைப்புக்கு மாற வேண்டும். அப்படி மாறாவிட்டால் 2014 ஜூன் 30-க்குப் பிறகு மானியம் பெறும் தகுதியை இழக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தூத்துக்குடி ஸ்பிக் உர நிறுவனம், சென்னை மணலியில் மெட்ராஸ் உர நிறுவனம் எனப்படும் மத்திய பொதுத்துறை நிறுவனம் என்ற 2 உரத் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த இரு தொழிற்சாலைகளும் நாப்தா மூலம் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரத்தை தயாரித்து வழங்குகின்றன.

தற்போது நாப்தாவை பயன்படுத்துவதற்கு பதில் எரிவாயுவை பயன்படுத்த தயாராகி வருகின்றன. இதற்காக கணிசமான அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

என்றாலும் இரு உரத் தொழிற்சாலைகளுக்கும் இதுவரை மத்திய அரசு எரிவாயு ஒதுக்கீட்டை உறுதி செய்யவில்லை. இதுதொடர்பாக கெயில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களிடம் எரிவாயு இணைப்பு பெற முயற்சிக்கப்பட்டது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

எரிவாயுவை இறக்குமதி செய்தால் ஆகும் செலவு, நாப்தாவுக்கு செய்யப்படும் செலவு அளவுக்கு இருப்பதால் தமிழகத்தில் உள்ள இரு உரத் தொழிற்சாலைகளும் எரிவாயு மூலம் யூரியா உரம் தயாரிப்புக்கு மாற முடியவில்லை. இந்த உண்மைகள் அனைத்தும் நன்றாக தெரிந்திருந்தும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையிலும் அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு இந்த முடிவை எடுத்து அறிவித்தது. மானியம் வழங்கப்படாத பட்சத்தில் இரு உரத் தொழிற்சாலைகளிலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பர். லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்பது தெரிந்தும், அதை கருத்தில் கொள்ளாமல் அப்போதைய காங்கிரஸ் அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

மத்திய உரத்துறை யூரியா உரத்தை நாப்தா மூலம் தயாரிப்பதற்கு பதில் எரிவாயு மூலம் தயாரிப்பதற்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால், எரிவாயு இணைப்புக்கு மாற போதுமான காலஅவகாசம் கொடுக்க வேண்டும். எனவே, தாங்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும். லட்சக்கணக்கான விவசாயிகள், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நலன் கருதி, தமிழகத்தில் உள்ள 2 உரத் தொழிற்சாலைகளும் எரிவாயு இணைப்புக்கு மாறும் வரை தொடர்ந்து அவற்றுக்கு மானியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x