Published : 26 Oct 2021 03:06 AM
Last Updated : 26 Oct 2021 03:06 AM

சமூக நலன், கருவூல கணக்கு துறைகளுக்கு ரூ.26.47 கோடியில் கட்டிடங்கள்: காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை

சமூக நலன், கருவூலக் கணக்குத் துறைகள் சார்பில் ரூ.26.47 கோடிமதிப்பிலான கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்கள், நிராதரவாக கைவிடப்படும் பெண்கள், குழந்தைத் திருமணங்கள், குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தற்காலிக தங்கும் வசதி,மருத்துவ உதவி, சட்ட உதவி, உளவியல் ஆலோசனை உள்ளிட்ட சேவைகளை வழங்கும் வகையில், மத்திய அரசின் நிர்பயா திட்டம், தமிழக சமூக நலத் துறை மூலம்ஒருங்கிணைந்த சேவை மையங்கள் மாவட்டந்தோறும் செயல்பட்டு வருகின்றன.

வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படும்போது முதலில் மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்பதால், இந்த மையங்கள் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்களில் கட்டப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கரூர், கிருஷ்ணகிரி, திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் தலா ரூ.48 லட்சம், நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரிமற்றும் மருத்துவமனை வளாகத்தில் ரூ.86 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியே 78 லட்சம் மதிப்பில்ஒருங்கிணைந்த சேவை மையங்கள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், பெண்கள் பணிநிமித்தம் நகரங்களுக்கு இடம்பெயரும் நிலையில், அவர்கள் நலனைப் பாதுகாக்க மாநிலம் முழுவதும் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.அந்தவகையில், தஞ்சை மாவட்டம் நாஞ்சிக் கோட்டையில் ரூ.1.47 கோடி மதிப்பில், பணிபுரியும் மகளிர்விடுதி கட்டப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநரகம் சார்பில், சென்னை கெல்லீஸ் அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு 2-ம் கட்டமாக 17,567 சதுர அடிபரப்பில் ரூ.4.53 கோடி செலவில், கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

மேலும், கெல்லீசில் சமூகப் பாதுகாப்பு இயக்குநரக அலுவலகத்துக்கு ரூ.1 கோடியில் 2-ம் தளம், ராயபுரம் அரசு குழந்தைகள் இல்ல வளாகத்தில் உள்ள வரவேற்புப் பிரிவு கட்டிடத்தில் ரூ.1.10 கோடியில்மருத்துவ சிகிச்சை அறை உள்ளிட்டகட்டிடங்கள், தஞ்சை அரசு குழந்தைகள் இல்ல வளாகத்தில் ரூ.48.40லட்சம் மதிப்பில் பல்நோக்குக் கூடம் என ரூ.11.36 கோடி மதிப்பில்கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதேபோல, கருவூல கணக்குத் துறை சார்பில் ரூ.15.11 கோடியில் திருநெல்வேலி, காஞ்சிபுரம், திண்டுக்கல்லில் மாவட்ட கருவூல அலுவலகக் கட்டிடங்கள், மண்ணச்சநல்லூர், பூந்தமல்லி, மயிலாடுதுறை, திண்டிவனத்தில் சார்நிலை கருவூலக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

புதிய கட்டிடங்களை காணொலிவாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இந் நிகழ்ச்சியில்,அமைச்சர்கள் பி.கீதாஜீவன், பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறைச் செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x