தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Updated on
1 min read

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தென்னிந்திய பகுதிகளில், குறிப்பாக தமிழகம், தெற்கு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்.25-ம் தேதி (நேற்று) தொடங்கியுள்ளது. இதன் காரணமாக 26-ம் தேதி தமிழகத்தில் பரவலாக மழை பெய்யவாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் பெய்யும்.

தெற்கு வங்கக்கடலின் மத்தியப்பகுதியில் 26-ம் தேதி வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது மேற்கு நோக்கி நகர்ந்துஅடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். இதன் காரணமாக 27-ம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கனமழையும், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

28, 29-ம் தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் பெய்யும்.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி யால் தெற்கு வங்கக்கடலின் மத்தியபகுதிகளில் மணிக்கு 40 - 60 கி.மீ.வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in