

கோவையில் உயிரிழந்த யானை யின் தந்தங்களை திருடிச் சென்றகும்பலை கண்டறிய 4 தனிக்குழுக்கள் அமைத்து வனத்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை போளுவாம்பட்டி வனச் சரகத்துக்குட்பட்ட வெள்ளியங்கிரி மலை அடிவாரப்பகுதி, மடக்காடு அருகே வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதுதெரியவந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: யானை உயிரிழந்து 40 நாட்கள் ஆகி இருக்கலாம். யானை யின் எலும்புகள் மட்டுமே எஞ்சியிருந்தன.
யானைக்கு 25 முதல் 28 வயது இருக்கலாம். உயிரிழந்த ஆண் யானையின் இரண்டு தந்தங்களை காண வில்லை. தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டதுபோன்று இல்லை. தந்தத் துக்காக வெட்டப்பட்டிருந்தால் எலும்புகள் உடைந்திருக்கும். இந்த யானை உயிரிழந்த 10 முதல் 15 நாட்களில் தந்தங்களை உருவி எடுத்துச்சென்றுள்ளனர். எலும்புகள் மட்டும் எஞ்சியிருந்ததால், எதனால் யானை உயிரிழந்தது என்பதற்கான காரணத்தை கண்டறிய இயலவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டு, தந்தத்தை கண்டறிய 4 தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கிடமான நபர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அருகில் எங்கேனும் தந்தம் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய வனத்துறையின் வளவன் என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. யானையின் உடல்பாக மாதிரிகள் டிஎன்ஏ பரிதோனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், வேறு எங்கேனும் தந்தம் மீட்கப்பட்டால், அது இந்த யானையினுடையதா என்பதை கண்டறிய முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.