

மத்திய அரசு அனுமதி அளித்தவுடன், இணை நோய்கள் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், இணைநோய் உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க அப்போலோ மருத்துவமனை குழுமம் முன்வந்துள்ளது.
இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் மருத்துவர் பிரதாப் சி.ரெட்டி கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் குழந்தைகளுக்கு கரோனா தொற்று பரவி வருகிறது. பெரும்பாலான குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனாலும், இணைநோய் உள்ள குழந்தைகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அதைக் கருத்தில்கொண்டு, ரத்த நோய்கள், நரம்பு, இதய பாதிப்பு, புற்றுநோய், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு உள்ளான குழந்தைகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தவுடன் இலவசமாக கரோனா தடுப்பூசி போட அப்போலோ திட்டமிட்டுள்ளது.
குழந்தைகளுக்கு கோவாக்சின், ஜைகோவ்-டி ஆகிய தடுப்பூசிகளைப் பயன்படுத்த அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகை தடுப்பூசிகள் அப்போலோவில் தேவையான அளவு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.