

கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திருநாவுக்கரசை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ஒரு வாரத்தில் ரத்து செய்யும்படி அகில இந்திய பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து மதுரை வழக்கறிஞர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். அப்போது, நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 15 பேரை கடந்த செப்டம்பர் மாதம் அகில இந்திய பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநாவுக்கரசு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபா கரன் ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இவ்வழக்கு விசாரணையின் போது, “மனுதாரர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு நீண்டகாலமாக நீடிப்பதால் அவரது வாழ்வாதாரம் பாதிக்கிறது. அதனால் மனுதாரருக்கு அவஸ்தையும், ஈடுசெய்ய முடியாத இழப்பும் ஏற்பட்டுள்ளது. அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள னர். எதிர்காலத்தில் எவ்வித போராட் டத்திலும் மனுதாரர் ஈடுபடமாட்டார்” என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.
அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலோ அல்லது வேறு எந்த ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலோ சம்பளத்தின் ஒருபகுதி மற்றும் அலவன்ஸ் பெற அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அதுபோல அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் சாதகமான முடிவு ஏற்பட்டால் அனைத்துப் பலன்களையும் அவர்கள் பெற முடியும். ஆனால், வழக்கறிஞர் தொழில் செய்பவர்கள் அதுபோல எந்த பணப்பலனையும் பெற வழியில்லை.
எனவே, மற்ற ஊழியர்களைவிட வழக்கறிஞர் தொழில் செய்வோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டால் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பதை உணர்கிறோம். எனவே, மனுதாரர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ஒரு வாரத்துக்குள் நீக்க வேண்டும் என்று அகில இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.