

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகைகள் தயாரிப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் புகார்களை வாட்ஸ் அப் எண் மூலம் தெரிவிக்கலாம் எனக் கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
''தயாரிக்கப்பட்ட இனிப்பு மற்றும் காரக் குவியலுக்கு மேல் பழைய செய்தித்தாள்களைக் கொண்டு மூடி வைக்கப்பட்டிருந்தாலோ, தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கொண்டு பொட்டலமிடப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டாலோ ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை வடிகட்டித் திரும்பத் திரும்ப இனிப்பு மற்றும் காரவகைகளைத் தயாரிக்கப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இனிப்புகளைத் தயாரிக்க அனுமதிக்கப்பட்ட நிறமிகளை, அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக நிறமிகள் இனிப்பு வகைகளில் சேர்க்கப்பட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டால் சட்ட ரீதியான உணவு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வகத்திற்கு அனுப்பப்படும்.
பகுப்பாய்வக அறிக்கையின் அடிப்படையில் உணவு வணிகரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளைத் தனியாக வைக்க வேண்டும். பால் சார்ந்த இனிப்பு வகைகள் உபயோகிக்கும் கால அளவை லேபிளில் அச்சிட வேண்டும். இனிப்பு மற்றும் கார வகைகளைப் பொட்டலம் செய்து விற்கும்போது அவற்றின் தயாரிப்புத் தேதி, உபயோகப்படுத்தும் காலம், பேட்ச் எண், தயாரிப்பாளர் முகவரி, உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் மற்றும் பதிவு எண் ஆகியவற்றை அதில் அச்சடித்து விற்பனை செய்ய வேண்டும்.
மேலும், அளவுக்கு அதிகமாக நிறமிகளைச் சேர்த்தல், சுகாதாரமற்ற நிலையில் உணவுப் பொருட்களைத் தயார் செய்தல், விநியோகித்தல், உணவுக் கலப்படம், பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் தொடர்பான புகார்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையின் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம்''.
இவ்வாறு கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.