

புதுச்சேரியில் ரவுடி தயாரித்த போலிப் பத்திரத்தை ஆட்சியில் உள்ள முக்கியப் பிரமுகர் உத்தரவின்படி பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதை முதல்வர் ரங்கசாமியிடம் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் தொடர்ந்து கொலைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக கடந்த 10 தினங்களாக நடைபெற்று வரும் கொலைகளால் மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான சிவா கூறியதாவது:
"காவல்துறையில் உள்ள புலனாய்வுத்துறை, ரவுடிகளுக்குள் நடைபெறும் மோதலைக் கண்டுபிடித்து தடுக்க வேண்டும். யாரெல்லாம் ஊருக்குள் நுழைந்தால் குற்றச் செயல்கள் நடைபெறுமோ அவர்களை ஊருக்குள் நுழையவிடாமல் தடுக்க வேண்டும். இவற்றைச் செய்யாததால் சிறைக்குள் உள்ள ரவுடிகளும், வெளியில் உள்ள ரவுடிகளும் இணைந்து புதுச்சேரியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாட்டில் வசித்து வருபவர்களின் சொத்துகளுக்கு ரவுடிகளால் போலிப் பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன. இந்தத் தவறைச் செய்பவர்களில் சிலர் மட்டும் மாட்டிக் கொள்கின்றனர். பலர் தொடர்ந்து தப்பித்து வருகின்றனர். தற்போதுகூட ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு இடத்திற்கு ரவுடி உருவாக்கிய போலிப் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பத்திரத்தைப் பதிவாளர் வேறு இடத்திற்கு மாறுவதற்கு முந்தைய தினமும், மக்கள் அதிகம் வராத விடுமுறை மாற்று தின சனிக்கிழமையையும் தேர்வு செய்து பதிந்துள்ளனர். அரசிலும், ஆளும் கட்சியில் உள்ள முக்கியப் பிரமுகர் உத்தரவின்படி இந்தப் பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கொலைகள் எதுவும் சிறு சிறு பிரச்சினைகளுக்காக உணர்ச்சி வசத்தால் நடைபெறவில்லை. அனைத்திற்குப் பின்னாலும் பெரிய சதித் திட்டமும், சட்டத்திற்குப் புறம்பான வகையில் திரட்டப்படும் பணமும் உள்ளது. கஞ்சா விற்பனை, கள்ள லாட்டரிச் சீட்டு விற்பனை, பாலியல் தொழில், கந்துவட்டி, போலிப் பத்திரம் தயாரித்து சொத்துகளை அபகரிப்பது உள்ளிட்டவற்றில் புரளும் சட்டத்துக்குப் புறம்பான பணமும், கொலைகள் உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு சீர்குலைவிற்கு முக்கியக் காரணமாக உள்ளது. இதுபோன்ற செயல்களைக் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்".
இவ்வாறு சிவா தெரிவித்துள்ளார்.