

கடந்த சில மாதங்களாக சென்னையில் மாலை 6 மணிக்கு பிறகு அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் மாநகர பஸ்களுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் மூலம் 765 வழித்தடங்களில் 3 ஆயிரத்து 652 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், கடந்த சில மாதங்களாக மாலை 6 மணிக்கு பிறகு சீரான பஸ் சேவை இல்லாததால், பஸ் நிறுத்தங்களில் மக்கள் கூட்டமாக நிற்கின்றனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு ஒரே நேரத்தில் 2 அல்லது 3 பஸ்கள் வருவதால் முதலில் வரும் பஸ்ஸில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கடைசியில் செல்லும் பஸ் காலியாக செல்கிறது.
இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர பஸ்களையே மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் அலுவலக பணிகளை முடித்துவிட்டு வர சுமார் இரவு 7 மணி ஆகிவிடுகிறது. ஆனால், போதிய அளவில் பஸ்கள் கிடைக்காமல் பஸ் நிறுத்தத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இரவு 8 மணி முதல் படிப்படியாக பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. மேலும், மாலை 6 மணி முதல் சீரான பஸ் சேவை இல்லாததால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது’’ என்றனர்.
இது குறித்து மாநகர போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பஸ்களை சீராக இயக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தவுடன் இந்த பிரச்சினை தீரும் என எதிர்பார்க்கிறோம். மேலும், இரவு 8 மணிக்கு பிறகு பஸ் எண்ணிக்கை குறைக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய கிளை மேலாளர் களுக்கு உத்தரவிடவுள்ளோம்’’ என்றனர்.
அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பஸ்களை சீராக இயக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தவுடன் இந்த பிரச்சினை தீரும் என எதிர்பார்க்கிறோம்.