

திருச்சியில் இன்று மழை பெய்தபோது, இரு வேறு இடங்களில் இடி தாக்கியதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
கடலூர், திட்டக்குடியைச் சேர்ந்தவர் வீரமுத்து மகன் வேலாயுதம் (60). அதே பகுதியைச் சேர்ந்த பாண்டு மகன் சங்கர் (45) உள்ளிட்ட சிலர், விவசாயக் கூலி வேலைக்காக திருவெறும்பூர் அருகேயுள்ள பத்தாளப்பேட்டை புத்தாம்பூரில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று (அக்.25) பத்தாளப்பேட்டையில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மழை பெய்தபோது திடீரென இடி தாக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே வேலாயுதம் உயிரிழந்தார். காயமடைந்த சங்கர் (45) திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் இந்தலூர் ஊராட்சியைச் சேர்ந்த சின்னையன் மகள் ரங்கம்மாள் (48). இவர் திருவெறும்பூர் அருகேயுள்ள கிளியூரில் நேற்று (அக்.24) வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென இடி தாக்கியதில் ரங்கம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.