

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே லாரி மோதி மாற்றுத்திறனாளி அதே இடத்தில் உயிரிழந்தார். ஊராட்சி சாலையில் லாரி இயக்கப்படுவதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேலு (60). மாற்றுத்திறனாளியான இவர் தனது கூடுதல் சக்கரம் பொறுத்தப்பட்ட ஸ்கூட்டரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க இன்று (அக். 25) காலை வந்தார்.
வி.கைகாட்டி அருகே உள்ள விளாங்குடி பிரிவு பாதையில் வந்தபோது, திருப்பத்தில் சென்ற லாரி பின்னோக்கி வந்ததால் மாற்றுத்திறனாளியின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், குழந்தைவேலு அதேயிடத்தில் உயிரிழந்தார்.
இதனிடையே, ஊராட்சி சாலையில் கனரக வாகனங்கள் இயக்கக் கூடாது என, விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட எஸ்.பி. கே.பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் கயர்லாபாத் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
உயிரிழந்த குழந்தைவேலின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, கயர்லாபாத் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.