கரூரில் தேர்தல் அலுவலர் காரை மறித்து போராட்டம் நடத்திய சம்பவம்; அதிமுக மாவட்ட, ஒன்றியக் கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது

தேர்தல் அலுவலர் மந்திராசலத்தின் காரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறித்து ஏடிஎஸ்பி கண்ணனிடம் வாக்குவாதம் செய்கிறார். | கோப்புப் படம்.
தேர்தல் அலுவலர் மந்திராசலத்தின் காரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறித்து ஏடிஎஸ்பி கண்ணனிடம் வாக்குவாதம் செய்கிறார். | கோப்புப் படம்.
Updated on
2 min read

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் அலுவலர் காரை மறித்து, முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வழக்கில் அதிமுக மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கரூர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 4 பேரை தாந்தோணிமலை போலீஸார் இன்று (அக். 25ம் தேதி) காலை கைது செய்தனர்.

கரூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் கடந்த 22 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

மாவட்ட ஊராட்சியின் 12 வார்டு உறுப்பினர்களும் வந்திருந்த நிலையில் திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட் டதால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரும், தேர்தல் அலுவலருமான மந்திராசலம் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாகக்கூறி அலுவலகத்தில் இருந்து வெளியேறி காரில் ஏறி புறப்பட்டார்.

இத்தகவலை அதிமுகவினர் அங்கிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினரிடம் தெரிவிக்க, அதிமுகவினர் ஓடிச் சென்று தேர்தல் அலுவலர் மந்திராசலத்தின் காரை மறித்து, முற்றுகையிட்டு கார் கதவு, கண்ணாடி ஆகியவற்றை தட்டி கார் முன்பு அமர்ந்து மறியல் செய்தனர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளிட்ட 57 பேரை தாந்தோணிமலை போலீஸார் கைது செய்து அன்றிரவு விடுவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரும், தேர்தல் அலுவலருமான மந்திராசலம் தாந்தோணிமலை போலீஸில் அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர், வழக்கறிஞர்கள் மாரப்பன், சுப்ரமணியன், திருமூர்த்தி, மதுசூதனன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், அலமேலு, சிவானந்தம், வசந்தா உள்ளிட்ட மேலும் சிலர் மீது சட்டவிரோதமாக ஒன்றுக்கூடுதல், சட்டவிரோதமாக அதிகாரியை த டுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய 6 பிரிவுகளின் அன்றைய தினம் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.திருவிகா, அவரது மகனும், கரூர் ஒன்றியக்குழு உறுப்பினருமான தமிழ்ச்செல்வன், கரூர் கிழக்கு ஒன்றியச்செயலாளர் கமலக்கண்ணன், தாந்தோணி கிளைச் செயலாளர் சுந்தர் ஆகிய 4 பேரை இன்று (அக். 25ம் தேதி) காலை தாந்தோணிமலை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in