Published : 25 Oct 2021 09:14 AM
Last Updated : 25 Oct 2021 09:14 AM

சமூகநீதி கண்காணிப்புக்குழு; 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றின் சாதனை: கி.வீரமணி பாராட்டு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ள சமூகநீதி கண்காணிப்புக் குழு, 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றின் சாதனை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் திமுக அரசு தனி வரலாறு படைத்துள்ளது சமூகநீதி வரலாற்றில்! இதுவரை வரலாறு காணாத பெருமிதத்திற்குரிய மகத்தான சாதனை!

சமூகநீதி வரலாற்றில் -ஓர் அமைதிப் புரட்சி!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்ட - பதவியேற்ற ஆட்சியாளர்களின் - முதலமைச்சர்களின் வரலாற்றிலேயே இது ஓர் அமைதிப் புரட்சி - சமூகநீதி வரலாற்றில்!
இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும், ஏன் ஒன்றிய அரசு (Union Government) க்கும் கூட வழிகாட்டும் வரலாற்றில் பொன் னேட்டை உருவாக்கியுள்ளது திமுக அரசு.

‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் என்று நாம் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதியன்று அன்போடு அழைத்துப் பாராட்டியது, வெற்றுப் புகழுரை அல்ல; பொருள் பொதிந்த, எவராலும் மறுக்க முடியாத சாதனைமூலம் உறுதி செய்யப்பட்ட - சரித்திரத்தில் என்றும் நிலைக்கும் ‘வாய்மையின் வாகை சூடும்‘ பெருமிதமும் அது!

எதிர்க்கட்சித் தலைவராக அவர் பொறுப்பேற்றிருந்தபோதே, சமூகநீதி அறப்போர் களத்தின் ஆற்றல்மிகு தளபதியாக, மற்ற கட்சிகள், அமைப்புகளுக்குத் தலைமை தாங்கி, பல்வேறு சமூகநீதி உரிமைகளுக்காக சட்டப் போராட்டங்களையும், சமூக விழிப்புணர்வு போராட்டங்களையும் வெற்றிகரமாக நடத்தியவர்.

உலகமே திகைக்கக்கூடிய வண்ணம் சாதனைகள்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இன்னும் 200 நாள்கள்கூட ஆகவில்லை; இதற்குள் அவர் நாளும் அடுக்கடுக்காக செய்துவரும் அபார சாதனைகளைக் கண்டு - அவர்தம் ஒப்பற்ற அடக்கமிகு ஆளுமையின் திறன்கண்டு உலகமே திகைக்கக்கூடிய வண்ணம் சாதனைகள் பெருகி, ‘‘திராவிட மாடல் ஆட்சி’’க்கு திறனறி போட்டியில் முதல் பரிசினைத் தட்டிச் செல்லுவதாக அமைந்துள்ளது.

மக்களாட்சியின் மாண்பு - என்பதற்கு இலக்கணம் கூறி, இலக்கை மறவாது இலட்சியப் பயணத்தினைத் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொண்டு ‘என் கடன் பணி செய்வதே’ என்று காட்டி, எவரும் எட்ட முடியாத அளவுக்கு நாளும் உயர்ந்துள்ளார். இந்தியாவின் பற்பல மாநில முதலமைச்சர்களிலே முதல் முதலமைச்சர் என்று அழைக்கப்படும்போதும் அவர் அடக்கத்தோடு எதிர்கொள்ளும் விதமும் வியப்புக்குறியை எழுப்புகிறது.

தன்னை முன்னிலைப்படுத்தாது, நாட்டு நலனையே முன்னிலைப்படுத்துகிறார்!

‘‘எமது மாநிலம் முதல் மாநிலமாக வேண்டும்; அதுவே எனது விருப்பம்‘’ என்று, தன்னை முன்னிலைப்படுத்தாது, நாட்டு நலனையே முன்னிலைப்படுத்தி மேலும் அடக்கத்தின் பெட்டகமாகிறார்!

சமூகநீதிப் பயணத்தில் சிறந்த ஒரு மைல்கல்

இன்று அவர் உருவாக்கியுள்ள ‘சமூகநீதி கண்காணிப்புக் குழு’ என்ற குழு, இந்திய வரலாற்றில் சமூகநீதிப் பயணத்தில் சிறந்த ஒரு மைல்கல். ஒரு வரலாற்று வழிகாட்டும் திருப்பம்! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள முகப்புரை (Preamble) பற்றி அரசமைப்புச் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடும்போது, ‘‘Preamble of the Constitution has been framed with great care and deliberation. It reflects the high purpose and noble objective of the Constitution- makers. It is the Soul of the constitution” என்று குறிப்பிட்டுவிட்டு, “நீதிகளை மக்களுக்கு அளிப்பதே அதன் முதற்பணி. சமூகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி ஆகியவற்றை மக்களுக்குப் பெற்றுத் தருவதே இலக்கு” என்று குறிப்பிட்டுள்ளனர்.

செயலில் காட்டும்‘!

அதற்கு செயல்வடிவம் கொடுத்து, சமூகநீதி இனி வெறும் ஆணைகளாக, சட்டங்களாக - ‘ஏட்டுச் சுரைக்காயாக’ இல்லாது, நடைமுறையில் அதைக் கிட்டும்படிச் செய்ய, அரசு துறைகளுக்கு வழிகாட்டி, கண்காணித்து, மேலும் சிறப்பாக செயல்பட வைக்கும் செயலூக்கியாக தகுந்த திறமையுள்ள அறிஞர்களை, சமூகநீதிப் போராளிகளை, ‘நுண்மான் நுழைபுலம்‘மிக்க கல்வியாளர்களை அடையாளம் கண்டு, ‘இதனை இதனால் இவர் முடிப்பார்’ என்று அறிந்து, பொறுப்பில் அமர்த்தி, எமது அரசு ‘சொல்வதோடு நிற்காது, செயலில் காட்டும்‘ என்று உலகுக்கே இந்தக் குழு நியமனம்மூலம் நிரூபித்துவிட்டார் நமது ஆற்றல்மிகு முதல்வர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களான பழங் குடியினர், சிறுபான்மையினர், அனைத்து சமூகப் பிரதிநிதிகளை, சமூகநீதியைப்பற்றி சரியாகப் புரிந்து களம் கண்டவர்களைக் கொண்ட சமூகநீதி கண்காணிப்புக் குழு அமைத்து - அதன் மூலம் இடஒதுக்கீட்டைக் கண்காணித்து - செயல்படுத்தி - ஆணை களை செம்மைப்படுத்த செய்துள்ள இந்த ஏற்பாடு அற்புதமான ஓர் ஏற்பாடாகும்.

சட்டத்தில், எழுத்தில் எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு தந்தாலும், நடைமுறையில் ‘கைக்கெட்டியது வாய்க்கெட்டாத’ வண்ணம், செயல்உரு கொள்வதில்லை. அதனை ஆராய்ந்து தீர்வு காண உதவிடும் குழு இந்தக் கண்காணிப்புக் குழு.

75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் செய்யப்படவில்லை

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு சிறந்த வழிகாட்டும் குழு - 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் செய்யப்படவில்லை. தமிழ்நாடும், நமது முதல்வரும் இந்த சாதனையை செய்துள்ளார். இதனை மற்ற மாநிலங்களும், ஒன்றிய அரசும் பின்பற்றவேண்டும். அப்போதுதான் சமூகநீதி வெறும் கானல் நீராக இல்லாமல், மக்களுக்குப் பயன்படும் வகையில் அமையும்.
முதல்வருக்கு வாழ்த்துகள் - நெஞ்சம் குளிர்ந்த நன்றி! நன்றி!! பாராட்ட வார்த்தைகளே இல்லை!

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x