Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM

நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வலியுறுத்தல்

சென்னை

கிராமப்புற மாணவர்கள் நலன்கருதி நவோதயா பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதி தரவேண்டும் என்று என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

நம் நாட்டில் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி வழங்கும் நோக்கத்தில் 661 நவோதயா பள்ளிகள் மத்தியஅரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு 75 சதவீத இடங்கள் தரப்படுகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நவோதயா பள்ளிகளை, மும்மொழிக் கல்வி என்பதற்காக மட்டும் தமிழகம் புறக்கணிப்பது ஏற்புடையதல்ல.

80% பேர் நீட் தேர்வில் வெற்றி

கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி நீட் தேர்வை அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால், இந்தபிரச்சினைக்கு நவோதயா பள்ளிகளிடமே தீர்வு உள்ளது. ஏனெனில், நவோதயா பள்ளிகளில் பயிலும் 20 சதவீதம் பேர் வரை ஜேஇஇதேர்வுகளிலும், 80 சதவீதம் பேர் நீட் தேர்விலும் வெற்றி பெறுகின்றனர்.

தமிழகத்தில் தற்போது 1,200-க்கும் மேலான சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கல்விதான் அமலில்உள்ளது. மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல் கட்சிநிர்வாகிகள் மற்றும் அவர்களின் உறவினர்களே இந்த சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தியும் வருகின்றனர்.

அதேபோல, அரசியல் தலைவர்களின் வாரிசுகள் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும்போது, கிராமப்புற குழந்தைகள் நவோதயா பள்ளிகளில் சிறந்த கல்வி பெறுவதை எதிர்ப்பது சரியானதல்ல.

நவோதயா பள்ளிகளில் இந்திதிணிப்பு என்பதிலும் உண்மை இல்லை. 8-ம் வகுப்பு வரை மாநில மொழிகளிலேயே பாடம் நடத்தப்படும். ஆங்கிலம் 2-வது மொழியாக இருக்கும். எனவே, மாணவர்கள் நலன்கருதி நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x