

காய்ச்சல், தொண்டை அலர்ஜி, அஜீரணக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 43 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வுசெய்து வருகின்றன. இந்த ஆய்வில் தரமற்ற, போலியானமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த செப்டம்பர்மாதத்தில் மட்டும் 1,227 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 1,184 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் காய்ச்சல், தொண்டை அலர்ஜி, அஜீரண கோளாறுகளுக்கான 43 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. இந்த மருந்துகள் இமாச்சலப் பிரதேசம், குஜராத், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த தரமற்ற மருந்துகள்பற்றிய விவரங்களை மத்தியமருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்தனது இணைய தளத்தில்(https://cdsco.gov.in) வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.