

தீபாவளி பண்டிகைக்காக இந்த ஆண்டு புதிய வகை பட்டாசுகள், துப்பாக்கிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சிறுவர்களைக் கவரும் வகையில் ஆண்டுதோறும் சிவகாசியில் வகை, வகையான பட்டாசுகளை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த ஆண்டும் சிறுவர்களைக் கவரும் வகையில் வெடித்த உடன்மேலே சென்று சுற்றிக்கொண்டே கீழே வரும் டிரோன் பட்டாசு, ஹெலிகாப்டர் பட்டாசுகள், மேலும், மதுப் பிரியர்களைக் கவரும் வகையில் பீர் டின் வகையிலான பட்டாசுகள் உள்ளிட்ட ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் சிறுவர்களைக் கவரும் வகையில் அசல் துப்பாக்கிகளைப் போலவே தீபாவளி துப்பாக்கிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை ரூ.50 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
சிறுவர்கள் மட்டுன்றி பெற்றோரும் ஆர்வமுடன் புதிதாக வந்துள்ள தீபாவளி துப்பாக்கிகளை வாங்கிச் செல்வது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, சிவகாசியில் பட்டாசு கடை நடத்தி வரும் கணேசன்கூறியதாவது: பட்டாசுகளை வெடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிறுவர்களைக் கவரும் வகையில் ஆண்டுதோறும் புதுப்புது பட்டாசுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டும் பல ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அசல் துப்பாக்கிகளைப் போலவே தீபாவளி துப்பாக்கிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கேப் வெடி துப்பாக்கிகள் மட்டுமின்றி இந்த ஆண்டு புதுவரவாக ரிவால்வர், பிஸ்டல், சைலென்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கி, இன்சாஸ்,ஏ.கே 47, மெஷின் கன் போன்ற ரகங்களில் பிளாஸ்டிக், பைபர் மட்டுமின்றி இரும்பில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் அசலைப் போல தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன என்றார்.