திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தர்களில் ஒரு பகுதியினர்.
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தர்களில் ஒரு பகுதியினர்.
Updated on
1 min read

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் கிரிகுஜாம்பிகை, பிறையணி அம்பாள் சமேத நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் நவக்கிரகங்களில் முக்கியமாக திகழும் ராகு பகவான் தனது இரு மனைவிகளுடன் மங்கள ராகுவாக அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் ராகுதோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

இக்கோயிலில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதையடுத்து, தற்போது குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு, உபயதாரர்களின் உதவியுடன் ரூ.5 கோடி செலவில் 7 ராஜகோபுரங்கள், 13 பரிவார தெய்வ விமானங்களுக்கு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன.

இதையடுத்து, கடந்த 18-ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. தொடர்ந்து, பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட யாகசாலை பந்தலில் 37 வேதிகைகளும், 108 குண்டங்களும் அமைக்கப்பட்டு, 250 சிவாச்சாரியார்கள், 40 ஓதுவார்கள் பங்கேற்று, ஆறுகால யாகசாலை பூஜைகளை நடத்தினர்.

குடமுழுக்கு தினமான நேற்று காலை ஆறாவது கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, காலை 7 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று, 13 பரிவார தெய்வ விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு பிரதானமான யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு, 7 ராஜகோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பிறகு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in