

முதுமலை, ஸ்ரீமதுரை பகுதிகளில்ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ‘விநாயகன்’ யானையை விரட்ட வனத்துறையினர் 6 கும்கி யானைகளை வரவழைத்துள்ளனர்.
கோவை மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டிய வரப்பாளையம், சோமையனூர், பாப்பநாயக்கன்பாளையம், சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது நுழைந்த விநாயகன், சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் காட்டு யானைகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பெரிய தடாகம், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே சுற்றி வந்த ‘விநாயகன்’ என்ற யானை கடந்த 2018-ம் ஆண்டு மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது. கோவையிலிருந்து வனத்துறை லாரி மூலம் முதுமலை புலிகள் காப்பகத்தில், அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மூன்றாண்டுகளாக விநாயகன் யானை, முதுமலை புலிகள் காப்பகபகுதியில் இருந்து வெளியேறி கூடலூர் சுற்று வட்டார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால், கூடலூர்-முதுமலை எல்லையோர கிராம மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர்.
யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விநாயகன் யானையை பிடித்து முதுமலை முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் கூறும்போது, ‘கோவையிலிருந்து முதுமலைக்கு மாற்றப்பட்டவிநாயகன் என்ற யானை, தென்னை மரங்களை சாய்கிறது. வீடுகளை சேதப்படுத்துகிறது. கூலி வேலை செய்து வரும் மக்கள் இரவில் நிம்மதியாக வீடுகளில் தூங்க முடிவதில்லை. எந்நேரமும் யானை வீட்டை தாக்கி விடுமோ என்ற பயத்திலேயே உள்ளனர். சமீபகாலமாக ஆட்கொல்லி புலியால் நிம்மதி இழந்து வந்த மக்களுக்கு, தற்போது விநாயகன் யானை பெரும் துயராக உள்ளது.
இந்த யானையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும். விநாயகன் யானை ஊருக்கு வருவதை தடுக்காவிட்டால் மீண்டும் மக்கள் போராடும் நிலைக்கு தள்ளப்படுவர்’ என்றார்.
இந்த யானையை வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் கிருஷ்ணா, சங்கர் ஆகிய கும்கி யானைகளை வரவழைத்து மதுரை, முதுமலை ஊராட்சி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். தற்போது 2-ம் கட்டமாக வசிம், மூர்த்தி, ஜம்பு, கணேஷ் ஆகிய மேலும் 4 கும்கி யானைகள் கூடலூர்-முதுமலை எல்லையான போஸ்பாரா பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: விநாயகன் யானை உட்பட காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க பல்வேறு உத்திகள் கையாளப்பட்டு வருகின்றன. முதுமலையில் இருந்து கூடுதலாக கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, விநாயகன் யானை வரும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
கும்கி யானைகளை கண்டால் காட்டு யானை எளிதில் ஊருக்குள் வர வாய்ப்பில்லை. இதனால், அதிகாரிகளின் மறு உத்தரவு வரும் வரை கும்கி யானைகள் கூடலூர்-முதுமலை எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.