

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் 69-வது நிறுவன தின மாநாடு விழுப்புரத்தில் நாளை நடக்கிறது. அதில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இது தொடர்பாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் வெளியிட்ட அறிக்கை:
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை காயிதே மில்லத் 1948-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கினார். இதைக் குறிக்கும் விதமாக விழுப்புரத்தில் மார்ச் 10-ம் தேதியன்று (நாளை) 69-வது நிறுவன தின நாள் கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவின்போது கட்சியின் அரசியல் மாநாடும் நடத்தப்படவுள்ளது. இதில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் சிறப்பாக செயல்படும் மஹல்லா ஜமாஅத்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது. மஸ்ஜித் மற்றும் மதரஸா உருவாக உதவுபவர்களுக்கு ‘‘சமுதாய ஒளி விளக்கு விருது’’ வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை இலங்கை நகர்ப்புற மேம்பாடு மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ஏ.ரவூஃப் ஹக்கீம் வழங்கவுள்ளார்.
இந்த மாநாட்டில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இ. அஹமது, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், திமுக முன்னாள் அமைச்சர் கா. பொன்முடி, கேரள முன்னாள் அரசு கொறாடாவும், மாநில இ.யூ. முஸ்லிம் லீக் பொதுச் செயலாளருமான கே.பி.ஏ. மஜீத் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.