Published : 17 Mar 2016 08:19 AM
Last Updated : 17 Mar 2016 08:19 AM

பாமக ஆட்சிக்கு வந்தால் சென்னையில் 8 ஆயிரம் இலவச பஸ்கள்: அன்புமணி

பாமக ஆட்சிக்கு வந்தால் சென்னையில் 8 ஆயிரம் இலவச பஸ்களை இயக்குவோம் என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பாமகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், ‘தமிழக வளர்ச்சி பற்றி அன்புமணி’ என்ற தலைப்பில் 7 நகரங்களில் பொதுமக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை நடத்தினார். 7-வது நாளான நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் ‘சென்னை பெருநகருக்கான புதிய நகர்ப்புற செயல்திட்டம் குறித்து அன்புமணி’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அன்புமணி பேசியதாவது:

அதிமுக, திமுகவுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. வளர்ச்சித் திட்டங்களும் இல்லை. இரு கட்சிகளும் தமிழகத்தை சீரழித்துவிட்டன. முதல்வர் என்பவர் மக்களை அணுக வேண்டும்; மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்க வேண்டும். ஆனால் தற்போதுள்ள முதல்வரை யாரும் பார்க்க முடியாது. அவரும் யாரையும் பார்க்க மாட்டார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம், அரசியல் கலாச்சார மாற்றம் வரவேண்டும்.

சென்னை மிகவும் பழமையான நகரம். இந்தியாவில் 4-வது பெரிய நகரம். இங்கு 90 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஆனால், இங்கு குடிநீர், மின்சாரம், கல்வி, சுகாதாரம் என எந்த வசதிகளும் இல்லை. சென்னை மழை வெள்ளத்தை யாராலும் மறக்க முடியாது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மழை வெள்ளத்தால் இந்த நகரம் பாதிக்கப்படுகிறது.

சென்னை மழை வெள்ளம் இயற்கையானதல்ல, செயற்கையாக உருவாக்கப்பட்டது. முன்னறிவிப்பு இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததே வெள்ளத்துக்கு முக்கிய காரணம். வெள்ளத்தால் பலர் உயிரிழந் தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை யும் உடமைகளையும் இழந்தனர்.

இதற்கெல்லாம் தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக, திமுகதான் காரணம். பருவநிலை மாற்றத்தால் வரும் காலங்களில் இன்னும் அதிகமான இயற்கைச் சீற்றங்கள் வரப்போகின்றன. இதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிமுக, திமுகவிடம் இல்லை. எங்களிடம் திட்டங்கள் இருக்கின்றன.

அதிமுகவும், திமுகவும் சேர்ந்து ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகளை ஆக்கிரமிப்பு செய்துவிட்டன. சென்னையில் 400 ஏரிகளை அழித்துவிட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக ஆடு, மாடு மற்றும் பொருட்களை கொடுக்க மாட்டோம். அதற்கு பதிலாக இலவசமாக தரமான கல்வி, சுகாதாரத்தை கொடுப்போம். சென்னையில் 8 ஆயிரம் பஸ்கள் இலவசமாக இயக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அன்புமணி ராமதாஸ் பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x