தமிழக எல்லையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்: கேரள மருத்துவக் கல்லூரி அட்டூழியம்

தமிழக எல்லையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்: கேரள மருத்துவக் கல்லூரி அட்டூழியம்

Published on

கம்பம் மெட்டு, போடி மெட்டு சோதனைச் சாவடி போலீஸார் தேர்தல் பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளதால், தமிழக எல்லையில் மீண்டும் மருத்துவக் கழிவுகளை கொட்டி, கேரள மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் அட்டூழியம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு பயன்படுத்திய சிரிஞ்சு, ஊசி, ரத்தம் சுத்தம் செய்த பஞ்சு, கையுறை, பேண்டேஜ் துணிகள், காலாவதியான மருந்து, மாத்தி ரைகள், அறுவை சிகிச்சை செய்யப்படும் உடல் பாகங்கள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் உயர் வெப்ப நிலையில் எரித்து அழிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், கேரளத்தில் உள்ள சில தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள் அவ்வாறு செய்யாமல், மாலை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் மருத்துவக் கழிவுகளை யாருக்கும் தெரியாமல் கொண்டுவந்து தமிழக-கேரள எல்லையில் மலைச்சாலையிலோ, விளை நிலங்களிலோ கொட்டி விட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் மண்வளம் பாதிக் கப்பட்டதோடு, நிலத்தடி நீரும் மாசடைந்தது. துர்நாற்றம் வீசி, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது.

இதனையடுத்து கம்பம் மெட்டு, போடி மெட்டு, லோயர் கேம்ப் சோதனைச் சாவடிகளில் போலீஸார் கேரளத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்குப் பின்னரே, தமிழகத்துக்குச் செல்ல அனுமதித்தனர். இதற்கிடையில், தேனி மாவட்ட விவசாயிகளும் மருத்துவக்கழிவுகளுடன் வரும் கேரள வாகனங்களை சிறைப் பிடித்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து வந்தனர். இதனால் சில ஆண்டுகளாக மருத்துவக்கழிவுகள் கொட்டப்படவில்லை. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் மருத்துவக் கழி வுகள் கொட்டப்பட்டு வரு கின்றன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அசோகர் பசுமை இயக்கத் தலைவரும், 18-ம் கால்வாய் திட்ட விவசாய சங்கச் செயலாளருமான ஏ.திருப்பதிவாசகன் கூறியதாவது: கேரள மாநிலம், கோதமங்கலம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கழிவுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு, வெளியில் தெரியாமல் இருக்க தார்ப்பாயால் மூடி தமிழக எல்லையான குமுளி வனப்பகுதியில் கொட்ட வந்த லாரியை வனத்துறையினரும், போலீஸாரும் பிடித்து ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூல் செய்து கடும் எச்சரிக்கைக்கு பின்னர் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் போடிமெட்டு 17-வது கொண்டை ஊசி வளைவில் மருத்துவக்கழிவுகள் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டு கிடந்தது. சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், சோதனைச் சாவடியில் இருந்த போலீஸார் தேர்தல் தொடர்பான பணிகளுக்குச் சென்று விட்டனர். இதன் காரணமாக மீண்டும் மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனைத் தடுக்க சோதனைச் சாவடியில் கூடுதல் போலீஸாரை நியமித்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in