

காவலர்களின் பிறந்த நாளன்று அவர்களை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து அட்டை வழங்கும் காவல் ஆணையர், அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்.
தொடர் பணி காரணமாக போலீஸாருக்கு போதிய ஓய்வு கிடைப்பதில்லை. அவர்களுக்கு விடுப்பும் கிடைப்பதில்லை, மருத்துவ காரணங்களுக்காகக்கூட சில நேரங்களில் விடுப்பு எடுக்க முடியாத நிலை உள்ளதாக காவலர்கள் வருந்தி வருகின்றனர்.
குறிப்பாக பெண் போலீஸார் அதிக அளவு மன அழுத்தத்துக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து போலீஸாரின் மன அழுத்தத்தை போக்கி, உற்சாகப்படுத்த தமிழக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பெண் காவலர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் பணியின்போது எவ்வாறு செயல்படுவது, குடும்பத்துக்கு எவ்வாறு நேரம் ஒதுக்குவது, தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் பராமரிப்பது எப்படி என்பன பற்றி சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னை பெருநகரில் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் பெண் ஆய்வாளர்கள் வரையிலான சுமார் 4,800 பேருக்கு காவல் பணியிலும் வாழ்க்கையிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெற ‘சமநிலை வாழ்வு முறை’ என்ற சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதேபோல் ஆண் காவலர்களின் மன அழுத்தத்தை போக்கவும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், போலீஸாரின் மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை போலீஸாரின் பிறந்தநாள் அன்று நேரில் அழைத்து அவர்களுக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வாழ்த்து அட்டைகளை வழங்கும் நடைமுறையை தொடங்கியுள்ளார்.
மேலும், அவர்களுடன் சேர்ந்து புகைபடமும் எடுத்து அவர்களிடமே அந்த புகைப்படம் கொடுக்கப்பட்டு வருகிறது. பிறந்தநாளன்று தொடர்புடைய போலீஸாருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக அதற்கு முன்தினமே நேரில் அழைத்து பாராட்டி விடுகிறார். காவல் ஆணையரின் இந்த செயல் போலீஸாரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.