எரிவாயு குழாய் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த ஆணையிடுக: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

எரிவாயு குழாய் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த ஆணையிடுக: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
Updated on
2 min read

மத்திய அரசு எரிவாயு குழாய் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தும்படி கெயில் நிறுவனத்திற்கு ஆணையிட வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கேரளத்தின் கொச்சியிலிருந்து பெங்களூருக்கு இயற்கை எரிவாயுவை கொண்டு செல்ல தமிழகத்தின் 7 மாவட்டங்களிலுள்ள விளைநிலங்கள் வழியாக குழாய்பாதை அமைக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இது 7 மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய் பாதை அமைப்பதற்காக இம்மாவட்டங்களைச் சேர்ந்த 5842 விவசாயிகளுக்கு சொந்தமான 1491 ஏக்கர் நிலத்தை கெயில் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதேபோல் இன்னும் பல மடங்கு நிலங்கள் கையகப்படுத்தவுள்ளன.

ஏக்கருக்கு ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை விலை போகும் நிலங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வரையே இழப்பீடு வழங்கப்படும் என்று கெயில் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில், இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட போது நிலங்களின் சந்தை மதிப்பு எவ்வளவோ, அதில் 40% மட்டும் இழப்பீடாக வழங்கினால் போதுமானது என கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி அளித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இது அடிமாட்டு விலைக்கும் குறைவானது. இதனால் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பயன் கிடைக்காது. இதைக் கருத்தில் கொண்டு தான் கெயில் நிறுவனத்திற்கு ஆதரவான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால், இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொள்ளாமல், இந்த திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் கெயில் நிறுவனத்திற்கு ஏற்படும் பாதிப்பை மட்டும் கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்றும் விவசாயிகளின் சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். பயிர்களின் விளைச்சல் குறைவது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆந்திராவில் நிகழ்ந்ததைப் போல எரிவாயுக் குழாய் வெடித்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத சேதம் ஏற்படக்கூடும்.

எரிவாயுக் குழாய் பாதை திட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு இத்தனை பாதிப்புகளும் ஏற்படுவதற்கு தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்த அதிமுகவும், திமுகவும் தான் காரணம் ஆகும். இத்திட்டத்துக்கு அனுமதி அளித்ததில் திமுகவுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதேபோல், தொடக்கக் காலத்தில் கெயில் நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனைத்து வழிகளிலும் ஆதரவு அளித்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான். உச்ச நீதிமன்றத்தில் கூட திறமையான மூத்த வழக்கறிஞரை நியமிக்காததுடன், நியமிக்கப்பட்ட வழக்கறிஞரும் இறுதி விசாரணை நாளில் நேர் நிற்காதது தான் இந்த பின்னடைவுக்குக் காரணம் ஆகும். இப்பாதிப்புக்கு திமுகவும், அதிமுகவும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த பிரச்சினையில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட எத்தகைய சட்டப் போராட்டமும் இனி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மாறாக அரசியல் ரீதியாக மத்திய அரசுக்கு அளிக்கப்படும் அழுத்தங்கள் தான் விவசாயிகளை பாதிப்புகளில் இருந்து மீட்பதற்கு உதவும்.

எனவே, கெயில் நிறுவனத்தின் இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; அல்லது கேரளாவில் செயல்படுத்தப்படுவதைப்போல நெடுஞ்சாலை ஓரங்களில் எரிவாயு குழாய் பாதைகளை அமைக்கும் வகையில் திட்டத்தை திருத்த வேண்டும் என்று மத்திய அரசை தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாயிகள் சங்கங்களும் வலியுறுத்த வேண்டும்.

மத்திய அரசும் இதற்காக காத்திருக்காமல் இந்த திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தும்படி கெயில் நிறுவனத்திற்கு ஆணையிட வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in