

கரோனா பெருந்தொற்று காரணமாக, கோமாரி நோய் தடுப்பூசி மருந்தை மத்திய அரசு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால்தான் தடுப்பூசி முகாம் நடத்துவதில் இடைவெளி ஏற்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடைத் துறை மூலம் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கடந்த 8 மாதங்களாக நடத்தப்படவில்லை என்றும், இந்த முகாம் நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் ‘இந்து தமிழ்’ நாளிதழில் நேற்று (அக். 24) செய்தி வெளியானது.
இது தொடர்பாக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அ.ஞானசேகரன் அளித்துள்ள விளக்கம்:
தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் கோமாரி நோய் தடுப்பு மருந்து 100 சதவீதம் மானியத்தில் மத்திய அரசால் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது. கரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய அரசு கோமாரி நோய் தடுப்பூசியை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் தடுப்பூசி முகாம்கள் நடத்துவதில் இடைவெளி ஏற்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவமனைகளின் குளிர்ப்பதன அறைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்துகளைக் கொண்டு நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தடுப்பூசியை முழுமையாக போட்டுள்ளோம். தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தென்காசி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கோமாரி நோய் தாக்கம் அதிகம் ஏற்படும் பகுதிகளில் 2.68 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது மத்திய அரசு மூலம் 13.79 லட்சம் கோமாரி தடுப்பு மருந்து பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர், மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பு மருந்துகள் பெற தமிழக அரசு மூலம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கால்நடை விவசாயிகள் தங்கள் கால்நடைகளையும் அவற்றின் கொட்டகைகளையும் சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். கால்நடைகளுக்கு சுகவீனம் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்றார்.