Published : 25 Oct 2021 03:09 AM
Last Updated : 25 Oct 2021 03:09 AM

குடும்பநல வழக்குகளில் விவாகரத்து தீர்வாகுமா?- சமரசத்துக்கு இடம் தராமல் வாழ்க்கையை தொலைக்கும் இளம் தம்பதிகள்

சென்னை

பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்து கோரி வழக்கு தொடரும் இளம் தம்பதிகள் பலர், இருதரப்பிலும் சமரசத்துக்கு இடம் தராமல் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கலாச்சார பெருமைமிக்க இந்தியாவில், இப்போதெல்லாம் அற்ப காரணங்களுக்காக விவாகரத்து கோருவது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. ஜாதகம், ஜோசியம் என பொருத்தம் பார்த்து, பணத்தை வாரியிறைத்து திருமணம் செய்து கொள்ளும் இளம்ஜோடிகளில் பலர், தேனிலவுக்கு செல்லும் இடத்தில்கூட பரஸ்பர புரிதல் இல்லாமல் சண்டை போட்டு பிரிந்து செல்லும் விநோதம் அரங்கேறி வருகிறது.

பெரும்பாலும் திருமணமான 3 மாதங்களில் ஆரம்பித்து, 3 ஆண்டுகளுக்குள் திருமண வாழ்க்கை கசந்த தம்பதியரே அதிக எண்ணிக்கையில் நீதிமன்ற படியேறி தீர்வு கிடைக்காமல் ஆண்டுக்கணக்கில் அலைந்து வருகின்றனர். இதனால் எந்த நீதிமன்றங்களிலும் இல்லாத அளவுக்கு 35 வயதுக்கு குறைவான திருமணமான இளம் தம்பதியரின் கூட்டத்தை குடும்ப நல நீதிமன்றங்களில் அதிகமாகக் காண முடிகிறது.

விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் கூறியதாவது:

குடும்பநல நீதிமன்றங்களின் முக்கிய நோக்கமே கருத்து வேற்றுமை, ஈகோ, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் பிரிந்து வாழும் தம்பதியரை ஒன்றாகச் சேர்த்து வைப்பதுதான். ஆனால் நீதிமன்றங்களில் தற்போது இந்த நிலைமை தலைகீழாக உள்ளது.

பொதுவாக குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்து கோருவது, சேர்ந்து வாழக் கோருவது, ஜீவனாம்சம் கோருவது, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, உடல், மனரீதியிலான குறைபாடுகள், உண்மைகளை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்தல் போன்ற காரணங்களுக்காக வழக்குகள் தொடரப்படுகின்றன.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகளால் சென்னையில் ஏற்கெனவே 4-ஆக இருந்த குடும்பநல நீதிமன்றங்கள் தற்போது 8-ஆக உயர்த்தப்பட்டுள்ளன. வாரத்தில் சனிக்கிழமை சேர்த்து 6 நாட்கள் இந்த நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அப்படியிருந்தும் ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் 600 முதல் 800 வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதால் விசாரணையை குறித்த காலத்தில் முடிக்க முடியாமல் நீதிமன்றங்கள் திணறி வருகின்றன.

60 முதல் 70 சதவீத விவாகரத்து வழக்குகள் பெண்களால் தொடரப்படுகின்றன. இளம்பெண்கள் பலர், கணவரையும், கணவர் வீட்டாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் போலீஸில் அளிக்கும் பொய் புகார்களும் சிலநேரங்களில் பிரிவுக்கு முக்கிய காரணமாகி விடுகின்றன.

படிப்பு, சம்பாத்தியம், யாருடைய துணையுமின்றி வாழ முடியும் என்ற அசட்டு தைரியம், குழந்தையின்மை, சந்தேகம், தகாத உறவு போன்ற பல்வேறு காரணங்களால் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை தற்போது முன்பைவிட அதிகரித்து வருகிறது.

கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள் மத்தியில் இத்தகைய பிரச்சினை அதிகமாக இல்லை. திருமணமான இளம் தம்பதியரிடையே சாதாரணமாக செல்போனில் ஆரம்பிக்கும் சண்டை இறுதியில் விவாகரத்தில் வந்து முடிகிறது. வி்ட்டுக்கொடுத்து செல்லும் மனப்பக்குவம் இருவருக்குமே இருப்ப தில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

விவாகரத்து மட்டுமே தீர்வாகுமா என உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுமதி லோகேஷிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

பெரும்பாலான விவாகரத்து வழக்குகளுக்கு பெற்றோரும் ஒரு முக்கிய காரணியாக உள்ளனர். முன்பெல்லாம் கணவர் வீட்டாருடன் சண்டை போட்டுக் கொண்டு பிறந்த வீட்டுக்கு வரும் மகளை பெற்றோர் கண்டித்து புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைப்பர். ஆனால் இப்போது பெற்றோரே விவாகரத்துக்கு அதிகமாக சிபாரிசு செய்கின்றனர்.

விவாகரத்து கோரி வழக்கு தொடரும் தம்பதியரை மீண்டும் பரஸ்பர புரிதலுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர்களுக்கு பலமுறை கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. ஆனால் இருதரப்பும் சமரசத்துக்கு இடம் கொடுக்காமல் இளம் வயதிலேயே வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.

பொதுவாக குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகளை 6 மாதத்திலும், ஜீவனாம்ச வழக்குகளை 3 மாதங்களிலும் முடிக்க வேண்டும். ஆனால் எனக்கு தெரிந்து 10 ஆண்டுகளாகியும் விவாகரத்து கிடைக்காமல் நீதிமன்றங்களிலேயே வாழ்க்கையை பறிகொடுத்த எத்தனையோ ஆண்களும், பெண்களும் உள்ளனர்.

எனவே குடும்பநல நீதிமன்றங்களில் நிரந்தரமான கவுன்சிலர்களை நியமித்து வழக்கு முடியும் வரை அவர்களே தொடர்ச்சியாக கவுன்சிலிங் கொடுக்க அறிவுறுத்த வேண்டும். கவுன்சிலர்களும், வழக்கறிஞர்களும் தவறான ஆலோசனைகள் வழங்கக் கூடாது. அதேபோல ‘பவர் ஆஃப் அட்டர்னி’ என்ற பெயரில் வழக்கு தொடரும் நபருக்கு பதிலாக அவரது பெற்றோர் விவாகரத்து வழக்குகளில் ஆஜராக ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x