

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாக 4 லட்சத்து 41 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடக்கிறது. முன்னதாக, வேட்பாளர்கள் மனுத்தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு ஒரு வாரம் முன்புவரை (ஏப்ரல் 15) வாக்காளர் பட்டியலில் ஆன்லைன் மூலமாக பெயர் சேர்க்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போது ஆன்லைனில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவை தொடர் பான மனுக்கள் நேரடியாக பெறப் படுவதில்லை. ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். வாக் காளர் சேவை மையத்தில் இதற் கான வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
தற்போது வரை, 4 லட்சத்து 41 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், ஒரு லட்சத்து 43 ஆயிரம் விண் ணப்பங்கள் பெயர் சேர்க்கவும், ஒரு லட்சத்து 79 ஆயிரம் விண்ணப்பங்கள் பெயர் நீக்கம், 90 ஆயிரம் திருத்தம், 29 ஆயிரம் விண்ணப்பங்கள் முகவரி மாற்றம் தொடர்பாகவும் வந்துள்ளன. இவற்றை பரிசீலிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
வாக்குப்பதிவு செய்வது எப்படி என்பதை பொதுமக்களுக்கு விளக்க தொகுதிக்கு 30 மாதிரி இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள் ளன. இது தவிர 17 தொகுதிகளில் வாக்களித்த சி்ன்னத்தை அறியும் வசதியுடன் கூடிய 10 இயந்திரங்கள் மூலம் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. நடமாடும் வாக்காளர் சேவை மையங்கள் 50 வாகனங்களில் செயல்படுகின்றன.
ஆன்லைனில் அட்டை
தமிழக தேர்தல் துறை பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. பழைய வாக்காளர் அடையாள அட்டைக்குப் பதில் புதிய வண்ண அட்டை பெறுதல், வண்ண புகைப்படத்தை பதிவு செய்தல் போன்றவற்றுக்கு எளிமையான வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து, சம்பந்தப்பட்ட பகுதி வாக்காளர் சேவை மையத்தில் பெறலாம். கட்டணத்தை, வாக்காளர் சேவை மையத்தில் செலுத்த வேண்டும். இந்நிலையில், வீட்டில் இருந்தபடியே, ஆன்லைனில் விண்ணப்பித்து, பணமும் செலுத்தும் வசதி நாட்டிலேயே முதன் முதலாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக,ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் தமிழக தேர்தல் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும், ஸ்டேட் வங்கி சார்பில் தலைமை பொது மேலாளர் பி.ரமேஷ்பாபுவும் கையெழுத்திட்டனர்.
இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
வீட்டிலிருந்தபடியே, வாக் காளர் அட்டையை பெற, கணினி அல்லது கைபேசி மூலம், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில், 001 என்ற படிவத்தை பூர்த்தி செய்து, ரூ.25- ஐ ஆன்லைனில் செலுத்தினால், வாக்காளர் அடையாள அட்டையை, தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
தங்கள் இருப்பிடத்தில் அடை யாள அட்டை பெற விரும்பு பவர்கள், கூடுதலாக தபால் செலவு ரூ.40 மற்றும் இதர செலவு ரூ.2 சேர்த்து, அடையாள அட்டைக்கான ரூ.25 உடன் தேர்தல் ஆணைய இணையதளத்தில் செலுத்த வேண்டும். இதற்காக, ஸ்டேட் வங்கியின் ‘கட்டண தளம்- payment gateway’ பயன்படுத்தப்படுகிறது. இதற்காக இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை வாக்காளர்கள் நாளை (இன்று) முதல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.