Published : 10 Mar 2016 04:47 PM
Last Updated : 10 Mar 2016 04:47 PM

தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் ஊழல்: ராமதாஸ் தாக்கு

தொழில் தொடங்க அனுமதி வழங்குவதற்கான ஊழலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''புதிய தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி அளிப்பதற்கு கையூட்டு வசூலித்து ஊழல் செய்வதில் ஒட்டுமொத்த இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் எத்தகைய ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதற்கு இது தான் அசைக்க முடியாத ஆதாரம் ஆகும்.

2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதாக வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மக்கள் நலன் சார்ந்த அனைத்து துறைகளிலும் தமிழகத்தை கடைசி இடத்துக்கு தள்ளி எதிர்மறையான சாதனைகளைத் தான் படைத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக இந்த தொழில் அனுமதி ஊழலில் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவின் 20 பெரிய மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேசத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழல் எவ்வாறு உள்ளது என்பதை அறிவதற்காக டெல்லியைச் சேர்ந்த தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழு நடத்திய ஆய்வில் தான் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களை அடையாளம் காணும் நோக்குடன் மாநிலங்களின் முதலீட்டை ஈர்க்கும் திறன் குறியீடுகளை இக்குழு தயாரித்துள்ளது. இதற்காக தொழிலாளர் வளம், கட்டமைப்பு வசதிகள், பொருளாதார தட்பவெப்ப நிலை, ஆட்சி மற்றும் அரசியல் நிலைத்தன்மை, நல்ல வணிக தட்பவெப்பநிலை ஆகிய 5 அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.

இவற்றில் தொழிலாளர் வளம், ஆட்சி மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகிய அம்சங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதாலும், அரசியல் ஸ்திரத்தன்மை நிலவுவதாலும் இவை சாத்தியம் ஆகியிருக்கின்றன.

ஆனால், தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கு முக்கிய அம்சமான ‘நல்ல வணிக தட்பவெப்பநிலை’யில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலத்தில் நல்ல வணிக தட்பவெப்பநிலை நிலவுகிறதா? என்பது, தொழில் தொடங்க அனுமதி அளிக்க கையூட்டு கோரப்படுகிறதா? அனுமதி தர அதிக காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறதா? சுற்றுச்சூழல் அனுமதிக்கு எவ்வளவு காலம் ஆகிறது? என்பன உள்ளிட்ட 22 காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

இந்த காரணிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் ஊழலில் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து தொழில்துறையினரும் (100%) தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டுமானால் பெருமளவில் பணத்தை கையூட்டாக தர வேண்டும்; இல்லாவிட்டால் தொழில் தொடங்க அனுமதி கிடைக்காது என்று கூறியுள்ளனர்.

இந்த புள்ளிவிவரம் தேர்தல் கருத்துக் கணிப்புகளைப் போல கற்பனையாக எழுதப்பட்டதல்ல. மாறாக தமிழகத்தில் தொழில் செய்பவர்களிடம் நேரடியாக பெறப்பட்டதாகும். தமிழகத்தில் இப்போது தொழில் நடத்துபவர்கள் அனைவரும் அதற்காக ஆட்சியாளர்களிடம் கையூட்டு கொடுத்திருக்கிறார்கள் என்பதால் தான் இவ்வாறு பதில் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பதில் ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆய்வில் வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை. மாறாக இது ஏற்கெனவே தெரிந்த ஒன்று தான். இதுபற்றி ஏராளமான ஆதாரங்களுடன் நான் பலமுறை அறிக்கை வெளியிட்டு உள்ளேன்.

ஏற்கெனவே தொழில் தொடங்கிய சிறு தொழிலதிபர் ஒருவர் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை விளக்கும் போது,‘‘ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு சிறிய தொழிற்சாலையை நான் அமைத்தேன். அதில் உற்பத்தித் தொடங்கவிருந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட துறையிலிருந்து அறிவிக்கை வந்தது. அதில் தொழிற்சாலைக்கு இன்னும் சில அனுமதிகளை வாங்க வேண்டும்; அந்த அனுமதிகளை 10 நாட்களில் பெற்று தாக்கல் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் தொழிற்சாலையை பூட்டி சீல் வைப்போம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்தத் துறையின் அதிகாரியை சந்தித்த போது, அமைச்சரிடம் பேசும்படி கூறினார். அமைச்சரை சந்தித்த போது, அனைத்து அனுமதிகளையும் வழங்க ரூ.40 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்பின் பேரம் பேசி அதை 20 லட்சமாக குறைத்தேன். எனது தொழிற்சாலையின் முதலீடே ரூ.1 கோடி தான் எனும் போது அதற்கு அனுமதி வாங்க ரூ.20 லட்சம் கையூட்டு என்பது மிகப் பெரிய தொகை’’ என்று கூறியிருந்தார். இப்போது இந்த தகவல் வெளியாகியிருப்பதன் மூலம் எனது குற்றச்சாட்டு உண்மை என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அனுமதி அளிப்பதில் தாமதமும், ஊழலும் தான் புதிய தொழில் முதலீடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்றும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தொழில்வளம் பெருகாததற்கு காரணம் ஊழல் தான் என்பதற்கு இதை விட வலிமையான ஆதாரம் தேவையில்லை.

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை நிலவுவதால் தான் தொழில் தொடங்க யாரும் முன்வருவதில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு குவிந்ததாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்ட போதிலும், இதுவரை ஒரு புதிய தொழிற்சாலைக்கு கூட அடிக்கல் நாட்டப்படவில்லை. இந்த அவலநிலைக்கு காரணம் ஊழலைத் தவிர வேறொன்றுமில்லை.

ஆட்சியாளர்களின் ஊழல் வெறி காரணமாக தொழில்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 70 நாட்களில் பாமக ஆட்சி அமையும் போது இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அப்போது தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதை தீர்மானிப்பதற்கான 5 அம்சங்களிலும் முதலிடம் வகிக்கும் மாநிலமாகவும், ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் நடைபெறும் சிறந்த மாநிலமாகவும் தமிழ்நாடு திகழும் என்பது உறுதி'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x