

மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே, கடலுக்கு அடியில் பழமையான சிற்ப கட்டிட சிதறல்களை கடல் தொல்லியல் ஆய்வுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வுப் பணிகளை தொடர மத்திய மற்றும் மாநில அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளதாக அத்துறையின் தலைவர் ராஜிவ் நிகாம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் பல்லவ மன்னர்களின் கட்டிடக் கலையை பறைசாற்றும் வகையில், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, ஐந்துரதம், புலிக்குகை என ஏராளமான சிற்பங்கள் அமைந்துள்ளன. இவற்றை கண்டு ரசிக்க, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதனால், சர்வதேச சுற்றுலா தலமாக மாமல்லபுரம் விளங்குகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் தேசிய கடல் ஆய்வு நிறுவனம், அத்துறையின் தலைவர் ராஜவ் நிகாம் தலைமையிலான கடல் தொல்லியல் துறை குழுவினர் மாமல்லபுரம் கடற்கரை கோயில் பகுதியில் நிலப்பரப்பு மற்றும் கடலுக்கு அடியில், கடந்த 11-ம் தேதி முதல் ஆய்வு நடத்தினர். கடற்கரை கோயில் பகுதியிலிருந்து கடலின் உள்ளே 1 கி.மீ. தொலைவுக்கு 17 இடங்களில், கடலுக்கு அடியில் உள்ள பொருட்களை கண்டுபிடித்து சமிக்ஞை செய்யும் நவீன இயந்திரம் மூலம் ஆய்வு செய்தனர்.
இதில், கடற்கரை கோயிலின் கிழக்கில் கடலின் மேற்பரப்பிலிருந்து சரியாக 5.7 மீட்டர் ஆழத்தில் பழமையான சிற்ப சிதறல்கள் இருப்பது கண்டறியப்பட்டன. மேலும், கடற்கரை கோயிலின் தென்பகுதியில் உள்ள மணற்பரப்பில் ‘பெனிட்ரேட்டிங் ரேடார்’ என்ற இயந்திரம் மூலம் ஆய்வு நடத்தியதில், மணலுக்கு அடியில் சுமார் 4 முதல் 6 மீட்டர் ஆழத்தில் பாறை கட்டிடங்கள் அமைந்துள்ளது கண்டறியப்பட்டன. இதன் மூலம், மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே வேறு ஏதேனும் சிற்ப கட்டிடங்கள் மற்றும் கோயில்கள் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுகுறித்து, தேசிய கடல் தொல்லியல் துறை பிரிவின் தலைவர் ராஜிவ்நிகாம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மத்திய தொல்லியல் துறை உத்தரவின்பேரில், குஜராத் மற்றும் துவாரகா ஆகிய பகுதிகளில் உள்ள கடல் பகுதியில் ஏற்கெனவே பல்வேறு ஆய்வுகளை நடத்தியுள்ளோம். தற்போது, தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், கடற்கரை கோயில் அருகே பழமைவாய்ந்த சிற்ப சிதறல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளோம். இதைத் தொடர்ந்து, கடற்கரை கோயில் பகுதியிலிருந்து கடலுக்குள் சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆய்வுப் பணிகளை தொடர, மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசிடம் நிதி கேட்டு அறிக்கை அளித்திருக்கிறோம். நிதி ஒதுக்கப்பட்டால், அடுத்த 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஆய்வுகள் தொடரும். தற்போது கண்டறியப்பட்டுள்ள சிற்ப சிதறல்கள், நகர கட்டிடமா அல்லது கோயிலில் அமைக்கபட்ட சிற்பங்களா என தெரியவில்லை. அனைத்து விதமான ஆய்வுகளும் முடிந்த பின்னரே, அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.