சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் அடிப்படை வசதியின்றி வாழும் இருளர் குடும்பங்கள்: மாற்று இடம் வழங்க கோரிக்கை

சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் அடிப்படை வசதியின்றி வாழும் இருளர் குடும்பங்கள்: மாற்று இடம் வழங்க கோரிக்கை
Updated on
1 min read

திருவண்ணாமலை அருகே சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் அடிப்படை வசதி இல்லாமல் 20-க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் குடும்பங்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருளில் வாழ்ந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை அருகே தென்மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் சரஸ்வதி நகரில் 20-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அனைவரும் கூலித் தொழிலாளிகள். ஏரிக்கரையில் வசித்து வரும் அவர்கள், மின்சாரம், குடிநீர், சாலை வசதியின்றி தவிக்கின்றனர். பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகளின் அச்சத் துடன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் இரவுப் பொழுதை கழிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “ஏரி மற்றும் ஏரிக்கரையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்கள் வீடுகளுக்கு மின்சாரம் கிடையாது. சூரியஒளி மூலம் தெரு விளக்குகள் மட்டுமே உள்ளன. இந்த வெளிச்சம் மூலம் தான் பிள்ளைகள் படிக்கின்றனர். வானம் மேகமூட்டத்துடன் இருந்தால், தெரு விளக்குகள் எரியாது. பிள்ளைகளின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்கேற்றி வைத்துத்தான் வசிக்கிறோம்.

ரேஷன் கார்டு இருந்தும் மண்ணெண்ணெய் இல்லை

12 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை உள்ளது. அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. மண்ணெண்ணெய் மட்டும் வழங்குவதில்லை.

எங்களுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யவில்லை என்று ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர். வெளிச் சந்தையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.50-க்கும் மேலாக விற்கின்றனர். ரேஷன் கடை மூலம் மண்ணெண்ணெய் வழங்கினால், வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு உதவியாக இருக்கும். பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகளின் கடியால் பலமுறை பாதித்துள்ளோம். விறகுகளை பயன்படுத்தித்தான் சமைத்து சாப்பிடுகிறோம்.

குடிநீர் வசதியும் கிடையாது. எங்கள் பகுதியில் உள்ள ஒரு குடிநீர் தொட்டியின் மோட்டார் பழுதடைந்ததால் நீரும் வருவதில்லை. நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம்.

பிழைப்புத் தேடி காலையில் செல்லும் நாங்கள், இருள் சூழ்ந்த பிறகுதான் திரும்புவோம். மழைக்காலத்தில் மிகவும் கஷ்டப்படுகிறோம். ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தால், எங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துவிடுகிறது.

இதனால், அரசுப் பள்ளிக்கு சென்று தங்குகிறோம். மழைக்காலத்தில் ஒவ்வொரு முறையும் அவதிப்படுகிறோம். அதனால், எங்களுக்கு ஏதாவது ஓர் இடத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்” என்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் கூறும்போது, “12 இருளர் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டும், மண்ணெண்ணெய் வழங்குவ தில்லை. இது குறித்து ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்துள்ளார்.

பின்னர், மாவட்ட வழங்கல் அதிகாரியிடம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முறையிட்டுள்ளோம்.மண்ணெண்ணெய் விரைவில் வழங்குவதாக அவர் உறுதி அளித்துள்ளனர்.

அவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in