Published : 24 Oct 2021 07:13 PM
Last Updated : 24 Oct 2021 07:13 PM

புதுச்சேரி வரலாற்றை 6, 7,8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்றுத்தர விரைவில் நூல்கள்

புதுச்சேரி

புதுச்சேரி வரலாற்றை பள்ளிகளில் 6,7,8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்றுத் தர தயாரான தகவல்கள் தொகுப்பு இரண்டரை ஆண்டுகளாக கல்வித்துறையில் அடைப்பட்டு கிடந்தது. இது விரைவில் நூல்களாக தயாராக உள்ளது. கடந்த 2007ல் நிறுத்தப்பட்ட இப்பணி 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. தனிக் கல்வி வாரியம் இல்லை. அதனால், தமிழக பாடத்திட்டத்தை புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர பாடத்திட்டமும் பின்பற்றப்படுகின்றன.

இதனால் நான்கு பிராந்தியங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புதுச்சேரி வரலாறே அறிய முடியாத சூழல் உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தால் புதுச்சேரி வரலாறு மற்றும் தொன்மையை குறிப்பிடும், "புதுச்சேரி அடையாளங்கள்" என்ற நூல் அறிமுக நிகழ்வு அந்நிறுவன வளாகத்தில் இன்று நடந்தது.

அந்நிகழ்வில் தாகூர் கல்லூரி முன்னாள் முதல்வரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான எ.மு.ராஜன் கூறுகையில், "புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் படிக்கும் குழந்தைகள் கல்வித்திட்டத்தில் முதல்வரின் பெயர் புதுச்சேரியை ஆளும் முதல்வரின் பெயர் இருப்பதில்லை. தமிழகம், ஆந்திரம், கேரளத்தின் முதல்வர்கள் பெயரே அவர்களுக்கு பாடத்திட்டத்தில் இடம்பெறுகிறது.

பள்ளிகளில் புதுச்சேரி வரலாறை சொல்லி தருவதே இல்லை. புதுச்சேரியில் முதல்வர் யார் என்ற வரலாறு, ஆறு, ஏரி, பிராந்தியங்கள் கூட தெரியாமல் பள்ளியில் படிக்கின்றனர். புதுச்சேரி வரலாற்றை பள்ளிக் குழந்தைகளுக்கு கொண்டு செல்ல முயற்சி தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டார்.

"புதுச்சேரி அடையாளங்கள்" நூலை எழுதியுள்ள ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரியும் முனைவருமான ராமதாசு கூறுகையில், "புதுச்சேரியில் கடந்த 2007ம் வரை புதுச்சேரி வரலாற்றை அறியும் வகையில் சமூகவியல் நூல் இருந்தது. ஆனால் 2007க்கு பிறகு அச்சிடுவதை நிறுத்திவிட்டனர். புதுச்சேரியை பற்றி பள்ளி குழந்தைகளுக்கு ஒன்றுமே நாம் சொல்லி தராத நிலை உள்ளது.

அதனால் பத்தாண்டுகளுக்கு மேலாக முதல்வர்கள், அமைச்சர்கள், கல்வித்துறை செயலர்கள், கல்வித்துறை இயக்குநர்கள் என பலரையும் சந்தித்து புதுச்சேரி வரலாற்றை பள்ளிக்குழந்தைகளுக்குக் கொண்டு செல்ல முயற்சித்தேன்.

கடந்த ஆட்சியில் கல்வித்துறையால் குழு அமைக்கப்பட்டு 6,7,8ம் வகுப்பு குழந்தைகளுக்கு புதுச்சேரி வரலாற்றை கொண்டு செல்ல நூல்களை உருவாக்கினோம். டிடிபி பணி முடித்து அச்சிட தயாராக இருக்கும் வகையில் சிடி தயாரித்து கல்வித்துறையில் தந்தோம்.

இரண்டரை ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் இல்லை. புதுச்சேரி அருமை தெரியாதவர்கள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது மீண்டும், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் ஆகியோரை சந்தித்து தெரிவித்துள்ளோம். கல்வித்துறைக்காக இந்நூல்களை அச்சிட்டு தருவதாக அமைச்சர் லட்சுமி நாராயணன் உறுதி தந்துள்ளார்.

விரைவில் இந்நூல்கள் 6,7,8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு செல்லும் என எதிர்பார்ப்பில் உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x