

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் 12 மாநில முதல்வர்கள் அளிக்கும் பதில் நமது முதல்வர் மு.க.ஸ்டாலினின் குரலுக்கு வலு சேர்ப்பதாக அமையும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி அரியமங்கலம் லட்சுமி நர்சரி பள்ளியில் இன்று கரோனா விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சியைத் தொடக்கி வைத்துப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது:
”தீபாவளி பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாமே என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வரப்பெற்றன. பள்ளிக்கு கட்டாயமாக வர வேண்டும் என்று அரசு கூறவில்லை. 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலானவர்களுக்கும் அதையேதான் கூறியுள்ளோம். ஒரு ஒழுங்குக்கு மாணவர்கள் பழக வேண்டும் என்பதற்காகவே நவ.1-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகுதான் வர முடியும் என்றால் தாராளமாக வரலாம்.
நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவு கோரி 12 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களை திமுக எம்பி-க்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தி, நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த ஆய்வறிக்கையை அளித்து, நீட் தேர்வு விவகாரத்தில் நமது நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளனர். அவர்களிடமிருந்து விரைவில் பதில் வரப் பெறும்.
மாநில உரிமைகளுக்காக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், இப்போதும் முதல் குரல் கொடுப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு விவகாரத்தில் அந்த மாநில முதல்வர்கள் அளிக்கும் பதில், நமது முதல்வரின் குரலுக்கு கண்டிப்பாக வலு சேர்ப்பதாக அமையும்.
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அவர்களுக்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.