

நாட்றாம்பள்ளி அருகே முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் சென்னையில் பணியாற்றி வந்த காவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், கணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (37). இவர் கடந்த 2003-ம் ஆண்டு 2-ம் நிலை காவலர் பணியில் சேர்ந்தார். வேலூரில் பணியாற்றி வந்த சுரேஷ்குமார் சென்னை மாநகர காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார்.
சுரேஷ்குமாருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால், மருத்துவ விடுப்பில் வேலூர் வந்தார். இந்நிலையில், இன்று காலை தனது நண்பரான கணியம்பாடியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (28), சாத்துமதுரையைச் சேர்ந்த முனிசாமி (28), பாகாயம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (52) ஆகியோருடன் சுரேஷ்குமார் கணியம்பாடியில் இருந்து ஈரோடுக்கு காரில் சென்றார். முருகேசன் காரை ஓட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி மேம்பாலம் வாணியம்பாடி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக கார் சென்றபோது முன்னால் சென்றுக்கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பின்னால் சென்ற கார் வேகமாக மோதி முன்பக்கம் நொருங்கியது. இதில், காரில் பயணித்த காவலர் சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
கார் ஓட்டுநர் முருகேசன் உட்பட 3 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்ததும் நாட்றாம்பள்ளி காவல் துறையினர் அங்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு, உயிரிழந்த சுரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.