

திமுக தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, ‘தனித்துப் போட்டி’ என்று அறிவித்துவிட்ட தால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
திமுக கூட்டணியில் இணையு மாறு தேமுதிகவுக்கு கருணாநிதி கடந்த டிசம்பர் 23-ம் தேதி பகிரங்க அழைப்பு விடுத்தார். கடந்த 8-ம் தேதி, ‘திமுக - தேமுதிக கூட்டணி முடிவாகிவிட்டதா?’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘பழம் கனிந்து கொண்டிருக்கிறது. அது எப்போது பாலில் விழும் என்பது முடிவாகவில்லை’ என்றார் கருணாநிதி. இதனால் திமுக - தேமுதிக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், அனைத்து யூகங்களுக் கும் முற்றுப்புள்ளி வைக்கும் வித மாக, ‘யாருடனும் கூட்டணி இல்லை. தேமுதிக தனித்துப் போட்டியிடும்’ என அக்கட்சியின் தலைவர் விஜய காந்த் அறிவித்துள்ளார். இது தேமுதிகவுக்காக காத்திருந்த திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக முன்னணி தலைவர்களுடன் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை கோபாலபுரம் இல் லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், முன் னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேமுதிகவின் ‘தனித்துப் போட்டி’ என்ற முடிவால் என்ன விளைவுகள் ஏற்படும்? விஜயகாந் தின் தலைமையை ஏற்று பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை தேமுதிகவுடன் கூட்டணி வைக் குமா? திமுக கூட்டணியில் வேறு ஏதாவது கட்சிகளை சேர்க்கலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்ட தாக திமுக வட்டாரங்கள் தெரி வித்தன.
அடுத்த இலக்கு
புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சியுடன் பேச்சு நடத்தலாம். மக்கள் நலக் கூட்டணியை உடைத்து சில கட்சிகளை கொண்டுவர முயற்சிக்கலாம் என்று கருணாநிதியிடம் யோசனை தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘திமுக கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு கருணா நிதி அழைப்பு விடுத்திருந்தார். கூட்டணிக்கு வருவதாக இருந்தால் வரலாம் என்ற நல்ல எண்ணத்துடன் விடுக்கப்பட்ட அந்த அழைப்பை ஏற்பதும், நிராகரிப்பதும் தேமுதிக வின் உரிமை. அவர்களது உரி மையில் நாங்கள் தலையிட முடியாது. தேமுதிக தனித்துப் போட்டியிடுவது திமுகவின் வெற்றி வாய்ப்பை நிச்சயம் பாதிக்காது’’ என்றார்.