Published : 24 Oct 2021 10:56 AM
Last Updated : 24 Oct 2021 10:56 AM

தமிழகத்தில் நேற்று 23 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

தமிழகத்தில் நேற்று (அக்.24) 23 லட்சத்து 27 ஆயிரத்து 907 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை, சென்னை ராணிமேரி கல்லூரி அருகில் சென்னை கீழ்ப்பாக்கம் ரோட்டரி கிளப் சார்பில் போலியோ விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மிதிவண்டி பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

உலக போலியோ தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. போலியோ என்கிற கொடிய நோயை ஒழித்த பெருமை ரோட்டரி அமைப்பினரைச் சாரும். போலியோ ஒழிப்பு மருந்தைக் கண்டுபிடித்த ஜோனாஷ் சால்க் அவர்களின் பிறந்தநாள் இன்று. போலியோ குறித்த விழிப்புணர்வு மீண்டும் மீண்டும் ஏற்படுத்துவதற்காக சென்னையில் இன்று ரோட்டரி அமைப்பினரின் சார்பில் மிதிவண்டி பிரச்சார பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழக முதல்வர் திட்டமிட்டபடி, மிகச் சிறப்பாக தமிழகத்தில் நேற்று 23 லட்சத்து 27 ஆயிரத்து 907 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதில் 2வது தவணை செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 68 ஆயிரத்து 457. முதல் தவணை செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 59 ஆயிரத்து 450. கூடுதலான வகையில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டது மகிழ்ச்சி
அளிக்கக்கூடியதாக இருந்தாலும், இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 69 சதவிகிதம் பேர். இரண்டாவது தவணை தடுப்பூசியை 29 சதவிகிதம் பேர் செலுத்திக்கொண்டுள்ளனர். இந்திய அளவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை சதவிகித அடிப்படையில் எண்ணிக்கை குறைவு என்றாலும், மிக விரைவில் தேசிய அளவிலான இலக்கை எட்டுவோம்.

இன்று தடுப்பூசி முகாம்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை வழக்கம்போல் தடுப்பூசி முகாம்கள் இயங்கும். தடுப்பூசிகள் தற்போது கையிருப்பாக 43 லட்சம் அளவுக்கு உள்ளது என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ரோட்டரி அமைப்பின் நிர்வாகிகள் ராஜசேகரன், அருனிஷ் ஊபரோய், கார்த்திக் சுரேந்தரன் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x