3 பேருக்கு தண்டனை குறைப்பு: உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினர் வேதனை

3 பேருக்கு தண்டனை குறைப்பு: உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினர் வேதனை
Updated on
1 min read

பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன் றம் உத்தரவிட்டதால் மாணவிகளின் குடும்பத்தினர் வேதனையடைந்துள்ளனர்.

கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் தருமபுரி அருகே பேருந்துக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். கடந்த 2000-ம் ஆண்டில் நடந்த இந்த சம்பவத்தில், கோவை வேளாண் பல்கலைக்கழக மாண விகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் பலியாயி னர்.

இந்த வழக்கில், நெடுஞ் செழியன், ரவீந்திரன்,முனியப்பன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது குறித்து காயத்திரியின் தந்தை வெங்கடேசன் (பூவனூர், விருத் தாசலம்) கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனது மகள் இறந்து 16 ஆண்டுகள் ஆகின்றன. எனது மகள் உட்பட 3 மாணவிகள் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் சரியான தீர்ப்பு வழங்கியது.

ஆனால் தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நீதி மறுக்கப்பட்டுள்ளது, வளைக்கப் பட்டுள்ளது. குற்றவாளிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அது போன்று செய்துவிட்டதாக வாதாடுகிறார். அதைக் கேட்ட நீதிபதியும் அவர் களது தண்டனையை எந்த அளவுக்கு குறைக்கலாம் என கேட்கிறார். அப்படியானால் ஏற்கெனவே தீர்ப்பை முடிவு செய்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேன்மை மிகுந்த நீதிபதி, தான் அளித்த தீர்ப்பு நியாயம் தானா என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். நீதித்துறை சார்ந்தவர் கள் குடும்பத்தில் யாரேனும் ஒரு வருக்கு இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருந்தால் இவர்கள் இவ்வாறு தான் நடந்து கொள் வார்களா?” என்றார்.

அடுத்தகட்ட நடவடிக்கை

நாமக்கல் மாணவி கோகில வாணியின் தந்தை வீராச்சாமி கூறும்போது, “இந்த தீர்ப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தீர்ப்பு கூறிய நீதிபதியின் மகளோ, மகனோ இந்த சம்பவத்தில் பாதிக்கப் பட்டிருந்தால் வேதனை தெரியும். மனிதாபிமானம் இல்லாத தீர்ப்பு. வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

வெங்கடேசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in