

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தலில் மொத்தம் உள்ள 74 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளில் 68 இடங்களையும், துணைத் தலைவர் பதவிகளில் 62 இடங்களையும் திமுக கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிந்து, வெற்றி பெற்ற உறுப்பினர்கள், கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் கடந்த 20-ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், மாவட்ட ஊராட்சிமற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள், கிராம ஊராட்சித் துணைத் தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், 9 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் அனைத்து மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது. துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் 6 இடங்களில் திமுகவும், 2 இடங்களில் காங்கிரஸும், ஒரு இடத்தில் விசிகவும் வெற்றி பெற்றன.
74 ஊராட்சி ஒன்றிய தலைவர்பதவிகளுக்கான தேர்தலில் 68 இடங்களில் திமுகவும், அதிமுக மற்றும் மதிமுக தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன. எஞ்சிய 4 ஒன்றியங்களுக்கான தலைவர்கள் தேர்தலில், 3 ஒன்றியங்களில் பாதிஉறுப்பினர்களுக்கு மேல் வராததாலும், ஒரு இடத்தில் தேர்தல் அறிவிப்பில் உள்ள குறைபாடு காரணமாகவும் தேர்தல் நடத்தப்படவில்லை.
74 ஒன்றிய துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் திமுக62 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
எஞ்சிய 5 இடங்களில் பாதி உறுப்பினர்களுக்கு மேல் வராததாலும், ஒரு இடத்தில் தேர்தல் அறிவிப்பில் உள்ள குறைபாடு காரணமாகவும் தேர்தல் நடைபெறவில்லை.
கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற மறைமுக இடைத்தேர்தலில் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் திமுகவும், கோவையில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. கரூர்மாவட்டத்தில் தேர்தல் நடைபெறவில்லை.
இதர மாவட்டங்களில் 6 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற மறைமுக இடைத்தேர்தலில் திமுக 4 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. ஒரு இடத்தில் தேர்தல் நடைபெறவில்லை.
13 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவிகளில், 7 இடங்களில் திமுகவும், அதிமுக, பாமக,சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. எஞ்சிய3 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.