

பேரணாம்பட்டு தொகுதியின் முன்னாள் திமுக எம்எல்ஏ ஆசிரியர் வெ.கோவிந்தன் உடல் நலக் குறைவால் காலமானார்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியர் வெ.கோவிந்தன் (80). அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிவர். ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்து பணியாற்றினார்.
1989-91 மற்றும் 1996-2001 காலகட்டத்தில் பேரணாம்பட்டு எம்எல்ஏவாக இருந்துள்ளார். திமுகவில் மாவட்ட துணைச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத் தலைவராக நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்ட சித்ராவுக்கான பாராட்டு விழாவிலும் பங்கேற்று பேசினார். இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று காலை வெ.கோவிந்தன் உயிரிழந்தார். அவரது உடலுக்கு திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திய பின் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு சரவணன், கதிரவன் என்ற மகன்கள், கனிமொழி, தேன்மொழி என்ற மகள்கள் உள்ளனர்.