Published : 24 Oct 2021 03:06 AM
Last Updated : 24 Oct 2021 03:06 AM

கொங்கு மண்டலத்தில் தொழில் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக ரூ.100 கோடி வரை முதலீடு செய்ய ‘சோஹோ’ திட்டம்: தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தகவல்

கோவை

கொங்கு மண்டல தொழில் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக, ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை முதலீடு செய்து உதவுவோம் என ‘சோஹோ’ ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.

தொழில்நுட்ப நிறுவனமான ‘சோஹோ’வின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு, கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு உள்ளூர் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், பல்வேறு தொழில் கூட்டமைப்பு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்து நேற்று கலந்துரையாடினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஒரு வாரமாக கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தொழில்துறையினரை சந்தித்துப் பேசினேன். கொங்கு மண்டலம், தொழில்துறையின் முக்கிய கேந்திரமாக உள்ளது. பொறியியல் சார்ந்த தொழில்கள், ஆயத்த ஆடை மற்றும் ஜவுளித்துறை தயாரிப்புகள், நூற்பாலைகள், பம்பு செட், இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு என பல்வேறு விதமான தொழில் கட்டமைப்புகள் இங்கு உள்ளன. இதற்கு இப்பகுதி மக்களின் ஒத்துழைப்பும் உள்ளது.

கொங்கு மண்டலத்தில் ஏராளமான தொழில் கட்டமைப்புகள் இருந்தாலும், இங்குள்ள தொழில் நிறுவனங்களில் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திர கட்டமைப்புகள் இங்கு இல்லை.

ஜப்பான், தென்கொரியா, தைவான் போன்ற நாடுகளைப் போல், கொங்கு மண்டலம் முழுமையாக வளர்ச்சியடைய, இந்திய தொழில்நுட்பங்கள் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் தொழில் மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தி, அதில் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு உதவ ‘சோஹோ’ நிறுவனம் முன்வருகிறது. ‘சோஹோ’வின் பரந்த ஆராய்ச்சி மற்றும் தொழில் மேம்பாட்டு அனுபவமும் இதற்கு முக்கிய பங்கு வகிக்கும்.

கொங்கு மண்டலத்தில் தொழில்துறையின் வளர்ச்சிக்காக, இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் தொழில் மேம்பாட்டுக்காக ‘சோஹோ’ நிறுவனத்தின் சார்பில் ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை முதலீடு செய்யப்படும். அதேபோல், கொங்கு மண்டலத்திலுள்ள பல்வேறு தொழில்துறையினரும், தங்களது முதலீட்டை இதில் செலுத்த வேண்டும்.

இந்த தொகை முதலீடு தொடர்பாக, கொங்கு மண்டலத்தில் உள்ள பெரிய அளவிலான பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் முன்னரே கலந்துரையாடலும் நடத்தப்பட்டுள்ளது.

இந்திய தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியின் மூலம் புதிய இந்திய தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டு, தொழில் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். இதன் மூலம் தொழில்வளம் மேம்படுவதோடு, வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

இதற்காக தொழில்துறை நிறுவனங்கள் சார்ந்த ஒரு கூட்டமைப்பு அடுத்த 3 மாதங்களுக்குள் ஏற்படுத்தப்பட உள்ளது. இருப்பினும், தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் தொழில்வள மேம்பாடு தொடர்பான செயல்பாடுகள் முழுமையடைய ஏறத்தாழ ஒரு வருடத்துக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தொழில்துறையை முன்னுக்கு கொண்டு செல்வது, மாநில அளவில் மட்டுமின்றி, நாட்டுக்கே ஒரு முன்மாதிரியான செயலாக இருக்கும்.

இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x