வெளியேற்றப்படும் நீர் அளவை குறைத்து பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடிக்கு உயர்த்தப்படுமா?- அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

வெளியேற்றப்படும் நீர் அளவை குறைத்து பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடிக்கு உயர்த்தப்படுமா?- அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
Updated on
1 min read

பலத்த மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே அணையில் இருந்து அதிகப்படியாக வெளியேற் றப்படும் நீரின் அளவைக் குறைத்து நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் ஆண்டு தோறும் நீர் பற்றாக்குறை மற்றும் மழையின்மையை காரணம் காட்டி நீர்மட்டத்தை உயர்த்த முடியாத நிலை ஏற்படுகிறது.

பலத்த மழை பெய்தாலும் அணையில் இருந்து அதிக அளவில் நீரை வெளியேற்றி ஒவ்வொரு முறையும் 136 அடியிலேயே நீர்மட்டம் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை 4 முறை மட்டுமே 142 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பெரியாறு அணை நீர்பிடிப்பு மற்றும் கேரள பகுதிகளில் ஒரு வாரத்துக்கும் மேலாகப் பலத்த மழை பெய்கிறது. எனவே சில நாட்களுக்கு முன்பு விநாடிக்கு 8,000 கனஅடி நீர் அணைக்கு வந்தது. இதனால் நீர்மட்டம் தற்போது 135 அடியை எட்டியது. இருப்பினும் அதிகளவில் நீர் வெளி யேற்றப்படுவதால் நீர்மட்டம் 135.80 அடியாகவே உள்ளது.

தற்போது தேனி மாவட்டத்திலும் அதிக மழை காரணமாக மூல வைகை, சுருளி ஆறு, கொட்டக்குடி, வராக நதி உள்ளிட்ட பல ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே விநாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்படுவதைக் குறைத்து அணை நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன நீர் விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ் கூறுகையில், தேனி உட்பட 5 மாவட்டங்களிலும் மழையால் போதுமான நீர் உள்ளது.எனவே பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரை குறைத்து 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்.

இதன் மூலம் இரண்டாம்போக சாகுபடி மற்றும் குடிநீருக்கு தேவைப்படும் நேரங்களில் தேக்கி வைத்த நீரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in