சிவகங்கை அருகே வேளாண் பணிகளுக்காக பேட்டரியில் இயங்கும் வாகனத்தை தயாரித்த ஐஐடி ஆராய்ச்சி மாணவர்

சிவகங்கை அருகே வேளாண் பணிகளுக்காக பேட்டரியில் இயங்கும் வாகனத்தை தயாரித்த ஐஐடி ஆராய்ச்சி மாணவர்
Updated on
1 min read

சிவகங்கை அருகே விவசாயப் பயன்பாடுகளுக்காக பழைய இரும்புப் பொருட்களை பயன்படுத்தி ஹைதராபாத் ஐஐடி மாணவர் பேட்டரி சரக்கு வாகனத்தை தயாரித்துள்ளார்.

சிவகங்கை அருகே சோனைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி போஸ், பாக்கியம் தம்பதியின் மூன்றாவது மகன் தமிழ்ச்செல்வன் (32). இவர் கோவை பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்று, ஹைதராபாத் ஐஐடியில் ஆராய்ச்சி மாணவராக உள்ளார்.

இவரது தந்தை போஸ் தனது நிலத்தில் விளையும் வாழைத் தார்களை வாடகை வாகனத்தில் மலம்பட்டி சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வரு கிறார். லாபத்தில் பாதியை வாகன வாடகைக்கே கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து செலவை குறைக்கும் வகையில் தந்தைக்காக வீட்டில் இருந்த பழைய இரும்புப் பொருட்களை பயன்படுத்தி பேட்டரி வானகத்தை தமிழ்ச்செல்வன் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் வாழைத்தார்கள் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவு குறைந்துள்ளது.

இந்த வாகனத்தை அப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக பேட்டரியில் மின்சாரம் சார்ஜ் செய்வதற்கான கட்டணமாக ரூ.100 மட்டும் வாங்குகிறார்.

இந்த வாகனத்தில் 500 கிலோ வரை பொருட்களை கொண்டு செல்ல முடியும். கால்நடை தீவனம், நெல் நாற்றுகள், வாழைத்தார், காய்கறிகள் போன்றவற்றை கொண்டு செல்ல இந்த வாகனத்தை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு 3 கி.மீ. தூரம் சைக்கிளில் செல்கின்றனர். அவர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் மாணவர்களின் சைக்கிள்களில் பேட்டரிகளை பொருத்தி மோட்டாரில் இயங்கும் வகையில் தமிழ்ச்செல்வன் வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்ச்செல்வன் கூறியதாவது: எனது படிப்பு முதலில் எனது கிராம மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக குறைந்த செலவில் விவசாயப் பணிகளுக்கான வாகனங்கள், கருவிகளை தயாரித்து கொடுக்கிறேன். தற்போது நவீன களையெடுக்கும் இயந்திரத்தை தயாரித்து வருகிறேன். நாம் கட்டளை இட்டால் இயங்கும் வகையில் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை செய்து வருகிறேன். இதன் மூலம் விவசாய பணிகளை எளிதாக்க முயற்சித்து வருகிறேன் என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in