Published : 23 Oct 2021 08:35 PM
Last Updated : 23 Oct 2021 08:35 PM

அனைத்து கடைகள், உணவகங்களுக்கு நேரக்கட்டுப்பாடு நீக்கம்: எவற்றுக்கெல்லாம் அனுமதி, தடை?- முழு விவரம்

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணிவரை மட்டும் செயல்பட விதிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகிறது.

அதே போன்று, அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில், பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் (both contact and non contact sports) நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது.

சிகிச்சை தேவைகளுக்காக (Therapeutic purposes) நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது.

திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும், செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

Ø அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8ஆம் வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும்.

Ø திரையரங்குகள் நூறு சதவிகிதம் பார்வையாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

Ø கூட்ட அரங்குகளில், அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

Ø ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும், செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

Ø மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர் சாதன பொது பேருந்து போக்குவரத்து, நூறு சதவிகிதம் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க உதவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

பொது:-

Ø கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).

Ø கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

Ø கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

Ø கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

பொதுமக்கள் பண்டிகை மற்றும் சமுதாய நிகழ்வுகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து நிறுவனங்களும் கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x