

அரிச்சுவடிகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் தெரிவித்தார்.
கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குதல், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (23-ம் தேதி) நடந்தன.
இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பணிகளைத் தொடங்கியும் வைத்தார். இந்நிகழ்வில் எம்.பி.க்கள் பி.ஆர்.நடராஜன் (கோவை), சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, திமுக மாவட்ட பொறுப்பாளர்களான முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக் (மாநகர் கிழக்கு), பையா என்ற ஆர்.கிருஷ்ணன் (மாநகர் மேற்கு), சேனாதிபதி (புறநகர் கிழக்கு) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’கோவையைப் பொறுத்தவரை 6,363 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளது. முதல்வர் உத்தரவின் பேரில் 8,905 புதிய மின்மாற்றிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் ரூ.203 கோடி மதிப்பில் மின்வாரியம் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மின்வாரியக் கடன்சுமை ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடியாக உள்ளது. வருடத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி வட்டி மட்டுமே செலுத்தப்படுகிறது. இதற்குக் காரணம் குறித்து ஆய்வு செய்தபோது, கடந்த ஆட்சிக்காலத்தில் மின் கொள்முதலுக்கே இதில் 50 சதவீதத் தொகையைச் செலவழித்துள்ளனர் என்பது தெரிந்தது.
தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் சொந்த நிறுவுதிறன் மூலம் 53 மெகாவாட் மட்டுமே அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி 2,500 மெகா வாட்டாக இருக்கின்றது. இடைவெளியைக் குறைக்க சூரிய மின்சக்தி, கேஸ் மின் உற்பத்தி ஆகியவற்றை அதிகப்படுத்தவும், முன்னரே 2006-11 காலகட்டத்தில் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தாமல் வைத்திருக்கும் 6,200 மெகா வாட் அளவுக்கான மின்திட்டங்களைச் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
ஒரு பக்கம் உற்பத்தி, மறுபக்கம் விநியோகம். இவையிரண்டையும் சீராக எடுத்துச் சென்றால்தான் நம்மால் சீராக மின்விநியோகம் செய்ய முடியும். 4 சதவீத கமிஷன் பெறுவதாக பாஜகவின் அண்ணாமலை தெரிவிக்கிறார். அரிச்சுவடிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. நேற்று முன்தினமே இதற்கு பெரியாரின் வாசகத்துடன் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றேன். நல்ல மனிதராக, சாப்பாட்டுக்கு உப்புப் போட்டு சாப்பிடும் ஆளாக இருந்தால் அண்ணாமலை ஆதாரத்தை வெளியிட வேண்டும். ஆதாரம் இல்லாமல் அவர் பேசுகின்றார்’’.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.