

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்தனர்.
தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதல் பெற்று மாணவர் சேர்க்கைக்கான பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 150 மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, விருதுநகரில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று (அக். 23) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், மருத்துவக் கல்லூரி வளாகத்தைப் பசுமையாகப் பராமரிப்பதற்காக, மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துடன் ராம்கோ நிறுவனமும் இணைந்து, 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிட்டு 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டுவைத்து இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். சீனிவாசன் எம்எல்ஏ, டீன் சங்குமணி, செவிலியர் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.
அதைத் தொடர்ந்து, விருதுநகர் நகராட்சியில் பணித்திறன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் பங்கேற்று, விருதுநகர் நகராட்சிப் பகுதியில் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்க அதிகாரிகளை அறிவுறுத்தினர். பின்னர், சாத்தூரில் புதிய பூங்காவைத் திறந்துவைத்து சாத்தூர் நகராட்சி அலுலவலகத்தில் நடைபெற்ற பணித்திறன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அலுவலர்களுக்குப் பல்வேறு அறிவுரைகள் வழங்கினர்.