

தீபாவளி பண்டிகையையொட்டி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆதரவற்ற 201 குழந்தைகளுக்கு தங்கபாண்டியன் எம்எல்ஏ தனது மாத ஊதியத்தில் இன்று புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தார்.
ராஜபாளையம் பொன்னகரத்தில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இதேபோன்று, மருதுநகரில் உள்ள 'லைட்-ஆஃப் லைஃப்' குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களில் உள்ள 201 ஆதரவற்ற குழந்தைகளுக்கு ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன், தனது ஊதியத் தொகையில் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், இந்த ஆண்டும் காப்பகத்தில் உள்ள 201 ஆதரவற்ற குழந்தைகளுக்கு 5-வது ஆண்டாக தனது 3 மாத ஊதியத் தொகையிலிருந்து ரூ.3.15 லட்சம் செலவில் ஆதரவற்ற குழந்தைகளை பிரபல ரெடிமேட் கடைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்குப் பிடித்தமான புத்தாடைகளை அவர்களையே தேர்வு செய்யச் செய்து வாங்கிக் கொடுத்தார். குழந்தைகளும் மகிழ்ச்சியோடு புத்தாடைகளைத் தேர்வு செய்து வாங்கினர்.
மேலும், தீபாவளி பண்டிகையன்று குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்கும்போது பாதுகாப்பாகவும் கவனமாகவும் பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டும் என்றும் தங்கபாண்டியன் எம்எல்ஏ அறிவுறுத்தினார்.