Published : 23 Oct 2021 03:02 PM
Last Updated : 23 Oct 2021 03:02 PM

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

கரூர்

தேர்தல் அலுவலரின் காரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது தேர்தல் அலுவலர் புகாரின் பேரில், தாந்தோணிமலை போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மாவட்ட ஊராட்சியின் 12 வார்டு உறுப்பினர்களும் வந்திருந்த நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலரும், தேர்தல் அலுவலருமான மந்திராசலம் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாகக் கூறி அலுவலகத்தில் இருந்து வெளியேறி காரில் ஏறிப் புறப்பட்டார்.

இத்தகவலை அதிமுகவினர் அங்கிருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினரிடம் தெரிவிக்க, அதிமுகவினர் ஓடிச் சென்று தேர்தல் அலுவலர் மந்திராசலத்தின் காரை வழிமறித்து, முற்றுகையிட்டு கார் கதவு, கண்ணாடி ஆகியவற்றைத் தட்டி கார் முன்பு அமர்ந்து மறியல் செய்தனர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளிட்ட 57 பேரை தாந்தோணிமலை போலீஸார் நேற்று கைது செய்து இரவு விடுவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலரும், தேர்தல் அலுவலருமான மந்திராசலம், தாந்தோணிமலை போலீஸில் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர், வழக்கறிஞர்கள் மாரப்பன், சுப்ரமணியன், திருமூர்த்தி, மதுசூதனன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், அலமேலு, சிவானந்தம், வசந்தா உள்ளிட்ட மேலும் சிலர் மீது சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், சட்டவிரோதமாக அதிகாரியைத் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், சொத்தைச் சேதப்படுத்துதல் (தேர்தல் அலுவலரின் கார் முன்பக்கக் கண்ணாடியை உடைத்தது) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x