Published : 23 Oct 2021 01:18 PM
Last Updated : 23 Oct 2021 01:18 PM

இருவேறு நிகழ்வுகளால் கும்பகோணம் பகுதியில் பதற்றம்: காவல்துறை அலட்சியம் ஏன்?- ராமதாஸ் கேள்வி

சென்னை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

''தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் நடந்த இரு நிகழ்வுகளால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பந்தநல்லூர் அருகே இளைஞர் ஒருவர் காதல் தொடர்பான மோதலில் கொல்லப்பட்டார். அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், அப்பகுதியில் அப்பாவிகள் தாக்கப்படுகின்றனர். கொலையானவரின் தரப்பைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினரைத் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அப்பாவிகளின் வாகனங்களைத் தாக்குதல், பெண்களை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட அத்துமீறல்கள் தொடர்கின்றன.

திருவைகாவூர் பகுதியில் கொடிமரம் நடும் விவகாரத்தில் வன்முறையைக் கையில் எடுத்த கும்பல், கண்ணம்மாள் என்ற பெண்ணின் வீட்டைச் சூறையாடியதுடன், அந்த வீட்டிலுள்ள 4 பெண்களை மானபங்கப்படுத்தியுள்ளது. இது காட்டுமிராண்டித் தனமானது.

இந்த அத்துமீறல்களில் அப்பாவிகள் மீது வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, வன்முறையாளர்கள் மீது அளிக்கப்பட்ட புகார்களைப் பதிவு செய்ய மறுக்கிறது. காவல்துறையினரின் இந்த அலட்சியமும், ஒரு சார்பு நிலைப்பாடும் கண்டிக்கத்தக்கது.

கும்பகோணம் பகுதியில் இப்போது நிலவும் சூழல், பாதிக்கப்பட்ட மக்களிடம் மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்படுத்தப்படாத அத்துமீறல்கள் விபரீதத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. காவல்துறை உயரதிகாரிகள் தலையிட்டு அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x