

கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் கரோனா தடுப்பூசியைத் தகுதியுள்ள அனைவருக்கும் செலுத்தும் வகையில், தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் கடந்த வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இதுவரை 5 கட்ட முகாம்கள் நடைபெற்றுள்ள நிலையில், 6-ம் கட்ட முகாம், இன்று (அக். 23) சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சென்னையில் 1,200-க்கும் மேற்பட்ட மையங்களில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஆறாவது தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமையொட்டி, சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகரில் உள்ள அரசு இ-சேவை மையத்தில் உள்ள கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.
மேலும், கண்ணகி நகரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமைப் பார்வையிட்டு, பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது, நாடாளுமன்ற திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை திமுக உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.